வன்முறை வழக்கில் 4 நாட்களில் தீர்ப்பளித்து அபுதாபி கோர்ட்டு அதிரடி- 3 பேருக்கு ஆயுள் தண்டனை
அபுதாபியில் வன்முறையில் ஈடுபட்ட வங்காளதேசத்தை சேர்ந்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 54 பேருக்கு சிறைத்தண்டனை விதித்து, 4 நாட்களில் விசாரணையை முடித்து கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
அபுதாபி,
வங்காளதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால் இந்த இட ஒதுக்கீட்டில் முறைகேடு ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பான வழக்கில் இந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்து டாக்கா ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. வங்காளதேச அரசு தொடுத்த மேல்முறையீட்டில் சுப்ரீம் கோர்ட்டு ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு தடை விதித்தது.
இதனை அடுத்து அங்குள்ள பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். ஆளும் கட்சிக்கு ஆதரவான மாணவர்கள் மற்றும் பிற மாணவர்களுக்கு இடையே வன்முறை நடந்தது. பலர் உயிரிழந்தும், படுகாயமும் அடைந்தனர்.
இந்த சம்பவத்தின் எதிரொலியாக அபுதாபி உள்ளிட்ட அமீரகத்தின் சில பகுதிகளில் கடந்த 19-ந் தேதி வங்காளதேசத்தை சேர்ந்த பலர் போராட்டத்திலும், வன்முறையிலும் ஈடுபட்டனர். இந்த சம்பவத்திற்கு அமீரக அட்டார்னி ஜெனரல் டாக்டர் ஹமத் சைப் அல் சம்சி உத்தரவின்பேரில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அமீரகத்தின் சட்ட திட்டங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீதான வழக்கை அபுதாபி கோா்ட்டு உடனடியாக வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. 30 அரசு வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகளையும், அதற்கான ஆதாரங்களையும் விரைவாக திரட்டி கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.
மேலும் அரசு சட்டத்திற்கு எதிராக ஈடுபட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை வழங்குமாறு நீதிபதிக்கு அரசு வக்கீல்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட வங்காளதேசத்தை சேர்ந்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும் 53 பேருக்கு தலா 10 வருடங்கள் சிறைத்தண்டனையும், அமீரகத்துக்குள் சட்ட விரோதமாக நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். மேலும் தண்டனை காலம் முடிந்த பிறகு அவர்களை நாடு கடத்தவும் உத்தரவிட்டார்.
அபுதாபியில் உள்ள வங்காளதேச தூதரகம், துபாயில் செயல்பட்டு வரும் துணைத் தூதரகம் ஆகியவை அமீரகத்தில் போராட்டத்தில் ஈடுபடும் வங்காளதேசத்தை சேர்ந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அந்த தூதரகங்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அமீரகத்தில் வேலை செய்து வரும் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் இங்குள்ள சட்ட, திட்டங்களை மதித்து நடக்க வேண்டியது அவசியம் ஆகும். சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரின் விசா ரத்து செய்யப்படுவதுடன் சிறைத்தண்டனை, அபராதம் உள்ளிட்டவற்றுடன் மீண்டும் அமீரகத்துக்குள் வருவதற்கான தடையும் விதிக்கப்படும்.
பொதுமக்கள் தங்களின் செல்போனுக்கு அனுப்பி வைக்கப்படும் போராட்டம் தொடர்பான வீடியோக்களை நம்பி ஆபத்தில் சிக்கி கொள்ள வேண்டாம். இது வரை 57 பேருக்கு அமீரக நீதிமன்றம் கடுமையான தண்டனைகளை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. எனவே விதிமுறைகளை மதித்து நடக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஓமன் நாட்டில் வசித்து வரும் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் தங்களின் நாட்டில் நடந்து வரும் கலவரங்கள் தொடர்பாக கவலையடைந்துள்ளனர்.
இது குறித்து மஸ்கட்டில் உள்ள வங்காளதேச சமூக மைய தலைவர் சிராஜுல் ஹக் கூறுகையில், ''ஓமனில் வசித்து வரும் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும். ஓமன் நாட்டில் போராட்டங்கள் உள்ளிட்ட எந்தவிதமான ஊர்வலங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும். சட்ட, திட்டங்களை மதித்து நடக்க வேண்டியது அவசியம் ஆகும்'' என வலியுறுத்தியுள்ளார்.