இஸ்தான்புல் குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக பல்கேரியாவில் 5 பேர் கைது


இஸ்தான்புல் குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக பல்கேரியாவில் 5 பேர் கைது
x

இஸ்தான்புல் குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக துருக்கியின் அண்டை நாடான பல்கேரியாவில் 5 நபர்களை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.

சோபியா,

துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள பரபரப்பான கடை வீதி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குண்டுவெடுப்பு நடந்தது. இந்த குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 81 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அதே சமயம் இதில் தொடர்புடையதாக 17 பேரை இஸ்தான்புல் போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இஸ்தான்புல் குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக துருக்கியின் அண்டை நாடான பல்கேரியாவில் 5 நபர்களை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். இதில் 3 பேர் மால்டோவியா நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள் என்றும், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் சிரிய-குர்தீஷ் மரபைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இவர்கள் 5 பேரும் துருக்கியில் உள்ள பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகவும், துருக்கி-பல்கேரியா எல்லை வழியாக ஆள் கடத்தலில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க பல்கேரிய கோர்ட்டில் அனுமதி பெறப்போவதாகவும், விசாரணைக்குப் பின் மற்ற தகவல்கள் வெளியிடப்படும் எனவும் பல்கேரியா காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story