இலங்கைக்கு ரூ.23 ஆயிரம் கோடி கடன்: சர்வதேச நிதியம் வழங்க ஒப்பந்தம் கையெழுத்து


இலங்கைக்கு ரூ.23 ஆயிரம் கோடி கடன்: சர்வதேச நிதியம் வழங்க ஒப்பந்தம் கையெழுத்து
x

Image courtesy: ANI

தினத்தந்தி 1 Sept 2022 1:20 PM IST (Updated: 2 Sept 2022 3:59 AM IST)
t-max-icont-min-icon

இலங்கைக்கு ரூ.23 ஆயிரம் கோடி கடன் வழங்க சர்வதேச நிதியம் ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

கொழும்பு,

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கி தவிக்கிறது. அன்னிய செலாவணி பற்றாக்குறையால் பெட்ரோல், டீசல், எரிவாயு போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாதநிலையில், அந்த பொருட்களுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம், இலங்கை தனது வெளிநாட்டு கடன்களை திருப்பி செலுத்துவதை நிறுத்தி வைத்தது. மேலும், பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐ.எம்.எப்.) கடன் கேட்டது.

கடந்த ஏப்ரல் மாத இறுதியில் இருந்து பேச்சுவார்த்தை நடந்தது. அப்போதைய இலங்கை நிதி மந்திரி அலி சாப்ரி, அமெரிக்காவுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். நிலுவையில் உள்ள கடன்களை மறுசீரமைப்பு செய்யுமாறு சர்வதேச நிதியம் நிபந்தனை விதித்தது. அதற்கான ஆலோசகர்களை இலங்கை அரசு நியமித்தது.

இதைத்தொடர்ந்து சமீபத்தில் சர்வதேச நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு வந்தது. அவர்களுக்கும், இலங்கை அரசு அதிகாரிகளுக்கும் இடையே சில நாட்களாக பேச்சுவார்த்தை நடந்தது. இலங்கை தரப்பில் 5 பில்லியன் டாலர் (ரூ.40 ஆயிரம் கோடி) கடன் கேட்கப்பட்டது.

இந்தநிலையில், இருதரப்புக்கும் இடையே அதிகாரிகள் மட்டத்திலான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இதன்படி, முதல்கட்டமாக இலங்கைக்கு அடுத்த 4 ஆண்டுகளுக்கு 290 கோடி டாலர் (ரூ.23 ஆயிரத்து 200 கோடி) கடன் வழங்க சர்வதேச நிதியம் ஒப்புக்கொண்டது.

இதுகுறித்து சர்வதேச நிதியம் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மோசமான பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு உதவுவதற்காக இந்த கடனை வழங்குகிறோம். இலங்கைக்கு மீண்டும் நிதி ஸ்திரத்தன்மையை கொண்டு வருவதே இதன் நோக்கம்.

வரி சீர்திருத்தங்களை அமல்படுத்துவதன் மூலம், வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கையை சர்வதேச நிதியம் வலியுறுத்துகிறது. எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றுக்கு உற்பத்தி செலவை மீட்டெடுக்கும் வகையில் விலையை நிர்ணயிக்குமாறு கூறியுள்ளோம். ஏழைகள் மற்றும் நலிந்தோருக்கு உதவுமாறும் தெரிவித்துள்ளோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story