கனடாவில் 22.5 மில்லியன் டாலர் கொள்ளை சம்பவம்; இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவர் உள்பட 6 பேர் கைது
கனடாவில் தங்கக் கட்டிகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவர் உள்பட 6 பேர் கைதாகியுள்ளனர்.
ஒட்டாவா,
கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் 17-ந்தேதி, சுவிட்சர்லாந்து நாட்டின் சுரிச் நகரில் இருந்து 'ஏர் கனடா' விமானம் மூலம் 22.5 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் மற்றும் வெளிநாடு நாணயங்கள் கனடா நாட்டிற்கு சரக்கு கண்டெய்னரில் கொண்டு வரப்பட்டன. டொரோண்டோ விமான நிலையத்தின் சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த இந்த சரக்கு கண்டெய்னர் அன்றைய தினமே திருடப்பட்டது.
போலி ஆவணங்களை பயன்படுத்தி கண்டெய்னர் திருடப்பட்டுள்ளதாகவும், இந்த திருட்டில் 'ஏர் கனடா' விமான நிறுவனத்தைச் சேர்ந்த 2 ஊழியர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் காவல்துறை குற்றம்சாட்டியது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வந்த கனடா போலீசார், இந்த வழக்கில் இதுவரை 6 பேரை கைது செய்துள்ளனர்.
இதில் பரம்பால் சித்து(54) மற்றும் அமித் ஜலோடா(40) ஆகிய 2 பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் ஆவர். இது தவிர அம்மாட் சவுத்ரி(43), அலி ரஸா(37) மற்றும் பிரசாத் பரமலிங்கம்(35) ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அமெரிக்காவில் ஆயுத கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள டுராண்ட்டே கிங்-மெக்லீன்(25) என்ற நபருக்கும் இந்த கடத்தலில் தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக சிம்ரன் பிரீத் பனேசார்(31), அர்சித் குரோவர்(36) மற்றும் அர்சலான் சவுத்ரி(42) ஆகிய 3 நபர்களுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பரம்பால் சித்து மற்றும் சிம்ரன் பிரீத் பனேசார் ஆகிய இருவரும் 'ஏர் கனடா' நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளனர். அவர்கள் மூலமாகவே இந்த கொள்ளை சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளதாகவும், கனடாவின் வரலாற்றில் மிகப்பெரிய கொள்ளை சம்பவம் இது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இது குறித்து கனடா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.