5 மாகாணங்களில் அவசரநிலை பிரகடனம் அமெரிக்காவில் வரலாறு காணாத கடும் குளிர் 8 பேர் பலியான சோகம்

அமெரிக்காவில் நிலவும் வரலாறு காணாத கடும் குளிர் காரணமாக 5 மாகாணங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் மத்திய மேற்கு மாகாணங்களில் வரலாறு காணாத வகையில் உயிரை உறையவைக்கும் கடும் குளிர் நிலவுகிறது. ஆர்ட்டிக் வானிலையின் விளைவால் கடுமையான பனிப்பொழிவு நிலவுவதால் பல்வேறு மாகாணங்கள் முடங்கி உள்ளன.
குறிப்பாக இல்லினாய்ஸ் மாகாணத்தின் சிகாகோ நகரில் அண்டார்டிகாவை விட கடுமையான குளிர் நிலவுகிறது.
அங்கு மைனஸ் 30 டிகிரி செல்சியசாக வெப்ப நிலை உள்ளது. அதே போல் வடக்கு டகோட்டா மாகாணத்தில் மைனஸ் 37 டிகிரி செல்சியசாக இருந்தது. வரும் நாட்களில் மைனஸ் 28 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் கீழாக வெப்பநிலை பதிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயல்பு வாழ்க்கை முடக்க ம்
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கி போய் உள்ளது. சிகாகோ உள்பட பல்வேறு நகரங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என தேசிய வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடும் குளிர் காற்று வீசுவதால் சில நிமிடங்களிலேயே குளிர்நடுக்கம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்துக்கு விளைவிக்கும் சூழல் நிலவுவதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மக்கள் ஆழ்ந்து மூச்சு விட வேண்டாம் என்றும் பேசுவதை குறைத்துக்கொள்ளும் படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
8 பேர் பலி
எனினும் பனிப்பொழிவு மற்றும் கடும் குளிருக்கு இதுவரை 8 பேர் பலியாகி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் குளிர் தொடர்பான நோய்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
குளிரை தாங்கும் வகையில் ஆடைகளை அணிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனால் சிகாகோ நகரில் கம்பளி ஆடை அணிந்து செல்பவர்களிடம் மர்ம நபர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி அவர்களின் ஆடைகளை பறித்து செல்லும் சம்பவங்கள் நடப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
விமானங்கள் ரத்து
விஸ்கான்சின், மிச்சிகன், இல்லினாய்ஸ், அலபாமா மற்றும் மிசிசிபி மாகாணங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. பல மாகாணங்களில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டு உள்ளன.
கடுங்குளிர் காரணமாக அமெரிக்கா முழுவதும் 2,700 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளன. எங்கு பார்த்தாலும் பனித்துகள்கள் குவிந்து கிடப்பதால் சாலை போக்குவரத்து மற்றும் ரெயில் போக்குவரத்தும் சிக்கலாகி உள்ளது.
வரும் நாட்களில் குளிர் மற்றும் பனிப்பொழிவு அதிகரிக்கக்கூடும் என்பதால் விழிப்புடன் இருக்குமாறு மக்களை அந்தந்த மாகாணங்களின் கவர்னர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
Related Tags :
Next Story






