கைது உத்தரவை ரத்து செய்யக் கோரி ஜாபர் சாதிக் மனுத்தாக்கல்: ஐகோர்ட்டில் நாளை விசாரணை
சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் தான் ஈடுபடவில்லை என்று ஜாபர் சாதிக் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளை கடத்தியதாக, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை, மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் கடந்த மார்ச் 9-ந்தேதி கைது செய்தனர்.
தற்போது டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாபர் சாதிக் மீது, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை தனியாக ஒரு வழக்கை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் அவரை கைது செய்துள்ளனர்.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், ஜாபர் சாதிக் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பான அவரது மனுவில், அமலாக்கத்துறை அதிகாரிகள், கடந்த மே 8-ந்தேதி முதல் 10-ந்தேதி வரையிலும், ஜூன் 25 மற்றும் 26-ந்தேதிகளிலும் என்று 5 நாட்கள் விசாரணை நடத்தினர். அவர்களது விசாரணைக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கினேன். அதேநேரம், 5 நாட்களில் என்னிடம் 2 நாட்கள் மட்டுமே விசாரணை நடத்தினர். ஜூன் 26-ந்தேதி மாலை 4.30 மணி வரை எந்த ஒரு விசாரணையும் நடத்தாமல், விசாரணைக்கு நான் ஒத்துழைக்கவில்லை என்று அன்று என்னை கைது செய்தனர்.
இந்த வழக்கு என் மீது உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நான் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபடவில்லை. எனவே, என்னை கைது செய்ததற்கு தடை விதிக்கவேண்டும். என்னை கைது செய்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்' என்று அதில் கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர், இந்த மனுவை நாளை விசாரிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.