'கோகுல்ராஜையும், சுவாதியையும் விசாரித்ததாக யுவராஜ் ஒப்புக்கொண்டுள்ளார்';ஐகோர்ட்டில் வக்கீல் வாதம்
கோவிலில் பேசிக்கொண்டிருந்த கோகுல்ராஜையும், சுவாதியையும் தான் விசாரித்ததாக யுவராஜ் ஒப்புக்கொண்டுள்ளார் என்று சென்னை ஐகோர்ட்டில் நடந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின்போது கோகுல்ராஜ் தாயார் தரப்பு வக்கீல் வாதம் செய்தார்.
சென்னை,
நாமக்கல் மாவட்டத்தில் நடந்த கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு, தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்ற 10 பேரும், ஐகோர்ட்டு மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தனர். அதேபோல, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சங்கர் உள்ளிட்ட 5 பேர் சிறப்பு கோர்ட்டு விடுதலை செய்ததை எதிர்த்து கோகுல்ராஜின் தாயார் சித்ரா, வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்குகளை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்தது. அப்போது, வழக்கின் முக்கிய சாட்சியான சுவாதி பிறழ் சாட்சியமாக மாறினார். இதையடுத்து அவரை வரவழைத்து விசாரித்த நீதிபதிகள், அவர் மீது தாமாக முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இருவரும், ஐகோர்ட்டு மதுரை கிளையில் இருந்து சென்னை ஐகோர்ட்டுக்கு வந்தனர். இதையடுத்து, இந்த வழக்குகளை சென்னை ஐகோர்ட்டில் நேற்று நீதிபதிகள் விசாரித்தனர். அப்போது போலீஸ் தரப்பில் ப.பா.மோகன், யுவராஜ் உள்ளிட்டோர் தரப்பில் மூத்த வக்கீல் ஏ.ரமேஷ் ஆஜரானார்கள்.
கோகுல்ராஜின் தாயார் தரப்பில் ஆஜரான வக்கீல் லஜபதிராய், "கோகுல்ராஜை யுவராஜ் மற்றும் அவரது ஆட்கள் அழைத்து சென்று கொலை செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. கோவிலில் கோகுல்ராஜும், சுவாதியும் பேசிக்கொண்டிருந்தபோது தான் சென்று அவர்களை விசாரித்ததாக தனியார் டி.வி. நடத்திய நேர்காணலில் யுவராஜ் ஒப்புக்கொண்டுள்ளார். கோகுல்ராஜிடமிருந்து சுவாதியை பிரித்து அழைத்து செல்வதற்கான கண்காணிப்பு கேமரா காட்சிகள் உள்ளது" என்று வாதிட்டார். பின்னர், 5 பேரை விடுதலை செய்த கீழ் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்தும் வாதிட்டார்.
இந்த வாதங்களை பதிவு செய்த நீதிபதிகள், "கோகுல்ராஜுடன் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கோவிலுக்குள் செல்லும் வரை தான் கண்காணிப்பு கேமரா காட்சிகள் உள்ளது. அதன் பிறகு நடந்த நிகழ்வுகள் தொடர்பான ஆதாரங்கள் இல்லை" என்று கூறினர்.இதையடுத்து, ஆதாரங்களை தாக்கல் செய்வதாக வக்கீல் கூறியதால், இந்த வழக்கை இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் விசாரிப்பதாக கூறி நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.