மத்திய சென்னையில் நான் முதல்வன் திட்டத்தில் 'உயர்வுக்கு படி' நிகழ்ச்சி


மத்திய சென்னையில் நான் முதல்வன் திட்டத்தில் உயர்வுக்கு படி நிகழ்ச்சி
x

மத்திய சென்னையில் நான் முதல்வன் திட்டத்தில் ‘உயர்வுக்கு படி' நிகழ்ச்சி மத்திய சென்னை, சைதாப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

சென்னை

முதல்-அமைச்சரின் அறிவுரையின்படி, தமிழ்நாடு அரசு இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கீழ் நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக 'உயர்வுக்கு படி' என்ற நிகழ்ச்சி மத்திய சென்னை, சைதாப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு சென்னை மாவட்ட கலெக்டர் மு.அருணா தலைமை தாங்கினார். இதில் மத்திய சென்னை வருவாய் கோட்டாட்சியர் பா.கியூரி, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சென்னை மண்டல இணை இயக்குனர் ஜோதிமணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சா.மார்ஸ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சரஸ்வதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் வாயிலாக பிளஸ்-2 முடித்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சார்ந்த மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முகாம்கள் நடத்தப்பட்டன. என்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. மற்றும் தாட்கோ, சுகாதாரத்துறை, சமூக நலத்துறை சார்ந்த ஆதிகாரிகள் கலந்து கொண்டு திட்டங்கள், பயன்படுத்தி கொள்ளும் வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு வழிகாட்டப்பட்டது.

முகாமில் பங்கேற்றவர்களில் 80 மாணவர்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், 36 மாணவர்கள் என்ஜினீயரிங் கல்லூரியிலும், 65 மாணவர்கள் தொழிற்பயிற்சி நிலையத்திலும் படிக்க பதிவு செய்தனர். 14 மாணவ-மாணவிகளுக்கு முதல் தலைமுறை பட்டதாரி சான்று, சாதிச்சான்று, இருப்பிட சான்றுகள் ஆகியவையும் வழங்கப்பட்டன. இதேபோல் வடசென்னையில் அடுத்த மாதம் (ஜூலை) 1-ந்தேதியும், தென் சென்னையில் அடுத்த மாதம் 7-ந்தேதியும் உயர்வுக்கு படி நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.


Next Story