சைதாப்பேட்டையில் வாலிபர் அடித்துக்கொலை - 7 என்ஜினீயர்கள் கைது
சென்னை சைதாப்பேட்டையில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். அவர் கட்டுமான பொருட்களை திருடப்போன இடத்தில் அடித்துக் கொல்லப்பட்டதாக 7 என்ஜினீயர்கள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை சைதாப்பேட்டை, வெங்கடாபுரம், குடிசைமாற்றுவாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சாகின்ஷா காதர் (வயது 23). பி.ஏ. பட்டதாரி. இவர் மீது ஏற்கனவே வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. இவர், நேற்று முன்தினம் தனது நண்பர்கள் வினோத், ஹேமா ஆகியோருடன் சைதாப்பேட்டை தாடண்டர் நகர் பகுதியில் புதிதாக கட்டப்படும் கட்டிடம் உள்ள பகுதியில் கால்பந்து விளையாடி கொண்டிருந்ததாக தெரிகிறது.
பின்னர் அவர்கள் புதிய கட்டிடம் அருகே கிடந்த இரும்பு போன்ற கட்டுமான பொருட்களை திருடிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
இதைப்பார்த்த கட்டுமான ஊழியர்கள் அவர்களை விரட்டிச்சென்றனர். ஹேமா, அவர்கள் கையில் சிக்காமல் தப்பி ஓடிவிட்டார். சாகின்ஷாகாதரும், வினோத்தும் மாட்டிக்கொண்டனர். அவர்கள் கட்டை போன்றவற்றால் சரமாரியாக தாக்கப்பட்டனர். அடியை வாங்கிக்கொண்டு வினோத்தும் தப்பி ஓடியதாக தெரிகிறது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
ஆனால் சாகின்ஷாகாதர் அடி பலமாக பட்டு அங்கேயே சுருண்டு விழுந்து விட்டார். அவரை சைதாப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக, சைதாப்பேட்டை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். சாகின்ஷா காதரை தாக்கிய கட்டுமான ஊழியர்களை கைது செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் சாகின்ஷா காதரின் உடலை வாங்க மாட்டோம் என்றும் அவரது உறவினர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். மேலும் சாகின்ஷா காதர் பொருட்களை திருடப் போகவில்லை என்றும் அவரது உறவினர்கள் கூறி உள்ளனர்.
இந்தநிலையில் போலீசார் நேற்று புகார் கூறப்பட்ட 8 பேரை கைது செய்தனர். அவர்களில் 7 பேர் என்ஜினீயர்கள் ஆவர். கைதானவர்களின் பெயர் விவரம் வருமாறு:-
என்ஜினீயர்களான உமாமகேஸ்வரன்(33), ஜெயராம்(30), நம்பிராஜ்(29), பாலசுப்பிரமணியன்(29), சக்திவேல்(29), மனோஜ்(27), அஜித்(27) மற்றும் ஊழியர் சிவபிரகாசம்(22). இவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.