பொள்ளாச்சியில் 8½ பவுன் நகை திருடிய வாலிபர் கைது


பொள்ளாச்சியில் 8½ பவுன் நகை திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 29 Sept 2023 12:15 AM IST (Updated: 29 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் 8½ பவுன் நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் 8½ பவுன் நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

செல்போன் திருட்டு

பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன்முத்தூரில் ஒரு தனியார் கல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் வேலை பார்க்கும் தொழிலாளர்களிடம் இருந்து நேற்று முன்தினம் செல்போன் திருடுபோனது. இதுகுறித்து தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் குமரன் நகர் வழியாக போலீஸ்காரர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். திடீரென்று வாலிபர் ஒருவர் போலீஸ்காரரை பார்த்ததும் ஓடினார். இதனால் சந்தேகமடைந்த அவர் அந்த வாலிபரை துரத்தி சென்று பிடித்து விசாரித்ததில், ஏற்கனவே பழைய வழக்குகளில் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அவரை அழைத்து சென்றனர்.

நகை திருட்டிலும் தொடர்பு

இதற்கிடையில் குவாரியில் செல்போன் திருடிய சம்பவம் தொடர்பான கண்காணிப்பு கேமரா வில் பதிவான உருவமும், போலீசில் சிக்கிய நபரும் ஒரே மாதிரி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் அவா் ஜமீன்கோட்டாம்பட்டியை சேர்ந்த நாகராஜ் (வயது 19) என்பதும், தற்போது குமரன் நகரில் வசித்து வருவதும் தெரியவந்தது. மேலும் அவர் குவாரியில் பணிபுரியும் தொழிலாளர்களிடம் இருந்து 4 செல்போன்களை திருடியதை ஒப்புக்கொண்டார். மேலும் கடந்த 2022-ம் ஆண்டு ஆச்சிப்பட்டியில் கார்த்தியேன் என்பவரது வீட்டில் இருந்து 8 ½ பவுன் நகையை திருடியது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பொள்ளாச்சியில் உள்ள கிளை சிறையில் அடைத்தனர்.


Next Story