கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு


கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு
x

கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது.

பெரம்பலூர்

2,244 பேர் விண்ணப்பிப்பு

பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 17 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. இதில் பெரம்பலூர் வட்டத்தில் காலியாக உள்ள 3 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு 408 பேரும், வேப்பந்தட்டை வட்டத்தில் 5 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு 671 பேரும், வேப்பூர் வட்டத்தில் 7 பணியிடங்களுக்கு 810 பேரும், ஆலத்தூர் வட்டத்தில் 2 பணியிடங்களுக்கு 355 பேரும் என மாவட்டத்தில் மொத்தம் 17 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு 2,244 பேர் எழுத்து தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.

6 மையங்களில் எழுத்து தேர்வு

அவர்களுக்கான எழுத்து தேர்வு 6 மையங்களில் நேற்று நடந்தது. இதில் பெரம்பலூர் வட்டத்திற்கு பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளிலும், வேப்பந்தட்டை வட்டத்திற்கு வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப்பள்ளியிலும், குன்னம் வட்டத்திற்கு வேப்பூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், ஆலத்தூர் வட்டத்திற்கு மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளியிலும் எழுத்து தேர்வு நடந்தது. காலை 9.30 மணிக்கு தேர்வாளர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வாளர்கள் தேர்வு கூட நுழைவு சீட்டு (ஹால் டிக்கெட்), கருப்பு பால் பாயிண்ட பேனா ஆகியவற்றை தவிர வேறு எந்தவொரு பொருட்களையும் தேர்வறைக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. நேற்று சுபமுகூர்த்த நாள் என்பதால் சிலர் விஷேச நிகழ்ச்சிக்கு சிக்கிரமாகவே சென்று விட்டு, தேர்வு எழுத அவசர அவசரமாக வந்ததையும் காணமுடிந்தது. கிராம உதவியாளர் பணிக்கு குறைந்த பட்சம் 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும், ஆனால் தேர்வு எழுத வந்தவர்களில் பெரும்பாலனோர் கூடுதல் கல்வி தகுதி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு மணி நேரம் மட்டும் தேர்வு

சரியாக காலை 9.50 மணிக்கு தேர்வு தொடங்கி காலை 10.50 மணிக்கு முடிவடைந்தது. 30 மதிப்பெண் கொண்ட தேர்வில் முதல் அரை மணி நேரம் கிராம உதவியாளர் பணி குறித்து அறை கண்காணிப்பாளர் தமிழ் மொழியில் வாசிக்க, அதனை தேர்வாளர் தமிழிலும், அடுத்த அரை மணி நேரம் ஆங்கில மொழியில் வாசிக்க, அதனை தேர்வாளர் ஆங்கிலத்திலும் எழுதினர். பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், வேப்பந்தட்டை அரசு கலை-அறிவியல் கல்லூரியிலும் நடந்த தேர்வினை மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதே போல் ஒவ்வொரு வட்டத்திற்கும் நியமனம் செய்யப்பட்டிருந்த துணை ஆட்சியர் நிலையில் கண்காணிப்பு அலுவலர்கள் தேர்வினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

1,571 பேர் எழுதினர்

திருமணமான பெண்கள் தங்களது கைக்குழந்தைகளை தனது கணவரிடம் ஒப்படைத்து விட்டு தேர்வு எழுத சென்றனர். அவர்கள் தாயாக மாறி குழந்தைகளை கவனித்து கொண்டதை காண முடிந்தது. பெரம்பலூர் வட்டத்தில் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த 408 பேரில், 282 பேரும், வேப்பந்தட்டை வட்டத்தில் 671 பேரில், 464 பேரும், வேப்பூர் வட்டத்தில் 810 பேரில் 607 பேரும், ஆலத்தூர் வட்டத்தில் 355 பேரில், 218 பேரும் என மொத்தம் 1,571 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 673 பேர் தேர்வு எழுத வரவில்லை. கிராம உதவியாளர் பணிக்கு எழுத்து தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்களுக்கு விரைவில் சைக்கிள் ஓட்டும் திறன் பரிசோதிக்கும் தேர்வும், நேர்முகத் தேர்வும் நடத்தப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story