பெண் வக்கீல்கள் திறம்பட வாதாடினால்தான் அங்கீகாரம் கிடைக்கும் - மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஸ்ரீமதி அறிவுரை
பெண் வக்கீல்கள் திறம்பட வாதாடினால்தான் அங்கீகாரம் கிடைக்கும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஸ்ரீமதி பேசினார்.
பெண் வக்கீல்கள் திறம்பட வாதாடினால்தான் அங்கீகாரம் கிடைக்கும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஸ்ரீமதி பேசினார்.
அங்கீகாரம் கிடைக்கும்
மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் மகளிர் தின விழா நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர் பழனிகுமார், மதுரை ஐகோர்ட்டு வக்கீல் சங்க நிர்வாகி கிருஷ்ணவேணி ஆகியோர் தலைமை தாங்கினர். நிகழ்ச்சியை மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஸ்ரீமதி தொடங்கி வைத்து பேசியதாவது:-
பெண் வக்கீல்கள், கட்சிக்காரர்களை சந்தித்து பிரச்சினைகளை கேட்பது, வழக்குகளை தயார் செய்வது போன்ற வேலைகளை மட்டும் செய்தால் வக்கீல் தொழிலில் பிரகாசிக்க முடியாது. தங்களது கட்சிக்காரர்களுக்காக கோர்ட்டில் ஆஜராகி சட்ட நுணுக்கங்களை எடுத்துக்கூறி கடுமையாக வாதாட வேண்டும். அப்போது தான் வக்கீல் என்ற அங்கீகாரம் கிடைக்கும்.
சட்டப்புலமை
அதேபோல ஏதாவது ஒரு துறை சட்டங்களில் நல்ல புலமையைப் பெற்றிருக்க வேண்டும். உதாரணமாக நிறுவன சட்டம், சிவில், கிரிமினல் போன்ற ஏதாவது ஒரு பிரிவில் மற்ற வக்கீல்களுக்கு சந்தேகங்கள் ஏற்பட்டால் குறிப்பிட்ட வக்கீலிடம் கேட்டால் தெளிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். தொழிலில் மற்றவர்களிடம் இருந்து நம்மை வேறுபடுத்திக்காட்டும் வகையில் சிறந்து விளங்க வேண்டும். கட்சிக்காரர்களிடம் உண்மையைப்பேசினால்தான் வக்கீல்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும். தொழிலில் கவனம் இருந்தாலும் பெண் வக்கீல்கள் உரிய வயதில் திருமணம் செய்து, குழந்தைப்பேறு பெற்றுக்கொள்ள வேண்டும். உடல்நிலையை முறையாக பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் மனநல மற்றும் குடும்பநல ஆலோசகர் சித்ரா பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். பெண் வக்கீல் சங்கத்தலைவர் ஆனந்தவள்ளி, மதுரைக்கல்லூரி பள்ளி செயலாளர் பார்த்தசாரதி ஆகியோரும் பேசினார்கள். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சபிதா, வனிதா, அகிலாண்டேஸ்வரி, தங்கம், ஷீலா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.