நகை, பணத்துடன் ஓட்டம் பிடித்த பெண்ணுக்கு மோசடி கும்பலுடன் தொடர்பு


நகை, பணத்துடன் ஓட்டம் பிடித்த பெண்ணுக்கு மோசடி கும்பலுடன் தொடர்பு
x

திருமண செயலியின் மூலம் லாரி டிரைவரை ஏமாற்றி திருமணம் செய்த பெண்ணுக்கு மோசடி கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சேலம்

எடப்பாடி:-

திருமண செயலியின் மூலம் லாரி டிரைவரை ஏமாற்றி திருமணம் செய்த பெண்ணுக்கு மோசடி கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

லாரி டிரைவர்

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அருகே உள்ள சாணாரப்பட்டியை சேர்ந்தவர் செந்தில் (வயது 48), லாரி டிரைவர். இவருடைய மனைவி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகன் உள்ளான்.

மனைவி உயிரிழந்த நிலையில், செந்தில் மறுமணம் செய்திட முடிவு செய்து, ஜோடி ஆப்-ல் பதிவு செய்து பெண் தேடி வந்தார். இந்நிலையில் அதே ஆப் மூலமாக அறிமுகமாகிய பெண் தனது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் என்று கூறி பேசினார். மேலும் அவர் கணவரை இழந்தவர் என்றும், நான் உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி திருமணம்செய்தார்.

திருமணம் ஆன ஒரே நாளில் வீட்டிலிருந்த நகை, பணங்களுடன் அந்த பெண் மாயமானார். திருமண செயலியின் மூலம் ஏமாற்றிய அந்த பெண் குறித்து டிரைவர் செந்தில் கொடுத்த புகாரின் பேரில் கொங்கணாபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென் மாவட்டங்களிலும் மோசடி

இந்த மோசடி பெண், ஏற்கனவே கோவை மாவட்டம் செல்வபுரம் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரிடம் இதேபோல் கைவரிசை காட்டி உள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் தேனியை சேர்ந்த சலவை தொழிலாளி மற்றும் மதுரையை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி உள்பட தென் மாவட்டங்களை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோரை இதேபோல் ஏமாற்றி பணம், நகைகளை அந்த மோசடி செய்ததாக புகார்கள் வந்துள்ளன.

இதனிடையே தலைமறைவான அந்த பெண் கோவை பகுதியில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அவரை பிடிக்க போலீசார் அங்கு முகாமிட்டு உள்ளனர்.

மோசடி கும்பலுடன் தொடர்பு

போலீசார் இந்த மோசடி பெண் குறித்து விசாரணை நடத்தியதில் அந்த பெண் லாரி டிரைவரிடம் முதலில் லதா என்றும், பின்னர் கவிதா என்றும் மாற்றி கூறி உள்ளார். தனி ஒரு பெண்ணாக வந்து லாரி டிரைவரை மயக்கி சேலம் அருகே ஒரு கோவிலில் மஞ்சள் கயிற்றை கட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார். அன்று இரவே லாரி டிரைவர் தூங்கியவுடன் வீட்டில் இருந்த பணம், நகையை திருடிக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளார்.

அத்துடன் நிற்காமல் லாரி டிரைவரின் ஆதார் கார்டு நகலையும் எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து ஓட்டம் பிடித்துள்ளார். மேலும் அந்த லாரி டிரைவரின் ஆதார் நகலை வைத்து கோவையில் ஆன்லைனில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டும் கைவரிசை காட்டி உள்ளார்.

இவ்வாறு அடுக்கடுக்காக மோசடியில் ஈடுபடும் அவருக்கு பின்னால் ஒரு மோசடி கும்பல் இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். எனவே அந்த கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.


Next Story