நிலத்தகராறில் பெண்ணை மரத்தில் கட்டி வைத்து தாக்குதல்; ஒருவர் கைது
நிலத்தகராறில் பெண்ணை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
தா.பேட்டை:
முசிறி தாலுகா வாளவந்தி கிராமத்தை சேர்ந்தவர் செல்லமுத்து. இவருக்கு செல்வராஜ், குமரவேல், குமார், தங்கராஜ் ஆகிய 4 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் செல்லமுத்து தனக்கு சொந்தமான சொத்துக்களை மகன்களுக்கு பிரித்து கொடுத்துள்ளார். இந்த சொத்து தொடர்பாக மகன்களுக்குள் கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது. இந்தநிலையில் செல்லமுத்துவின் மகன்கள் செல்வராஜ், தங்கராஜ், குமரவேல் ஆகியோர் நிலத்தை வேறு ஒருவருக்கு விற்றதாக தெரிகிறது. ஆனால் இந்த சொத்தில் தனக்கும் பங்குள்ளதாக குமாரின் மனைவி சரஸ்வதி (வயது 40) கூறி வந்துள்ளார்.இந்நிலையில் செல்வராஜ் தங்கள் பாகத்திற்கு உரிமையான கிணற்றில் இருந்து அதே பகுதியை சேர்ந்த பழனியாண்டி(59) என்பவரது வயலுக்கு குழாய் மூலம் தண்ணீர் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதைக்கண்ட சரஸ்வதி பொது கிணற்றில் இருந்து தண்ணீரை வேறு வயலுக்கு கொடுக்கக்கூடாது என்று கூறி வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதில் பழனியாண்டி தரப்பினர் சரஸ்வதியை அடித்து உதைத்து அங்கிருந்த மரத்தில் கட்டி வைத்து மானபங்கம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து காவல் உதவி எண் 100-க்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஜெம்புநாதபுரம் போலீசார், மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த சரஸ்வதியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முசிறி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். போலீசாரை கண்டதும், தகராறில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்த சரஸ்வதி அளித்த புகாரின்பேரில் பழனியாண்டி, செல்வராஜ், தங்கராஜ், குமரவேல், சின்னதம்பி, பழனியாண்டியின் மனைவி சுமதி உள்ளிட்டோர் மீது ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பழனியாண்டியை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.