அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்த பெண் சாவு


அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்த பெண் சாவு
x

அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்த பெண் 2 நாட்களுக்கு பிறகு பிணமாக மீட்கப்பட்டார்.

சென்னை

மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம், மெட்ரோ நகர் 1-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 6 வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் அதே ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த கலா (வயது 52) என்பவர் வீட்டு வேலை செய்து வந்தார். அத்துடன் அடுக்குமாடி குடியிருப்பின் வாகனங்கள் நிறுத்துமிடம், மொட்டை மாடி உள்ளிட்ட பகுதிகளையும் சுத்தம் செய்து வந்தார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு வழக்கம்போல் வீட்டுக்கு வேலைக்காக அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்ற கலா அதன்பிறகு வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய மகள்கள், தங்கள் தாயை காணவில்லை என மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் மாயமான கலாவை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அதே அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கழிவுநீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியது. அங்கு வசிப்பவர்கள் கழிவுநீர் தொட்டியில் பார்த்தபோது, அங்கு மாயமான கலா பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த மதுரவாயல் போலீசார், கழிவுநீர் தொட்டிக்குள் கிடந்த கலா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டு வேலை செய்ய வந்த கலா, அதன்பிறகு வரவில்லை. ஏதோ வேலை காரணமாக அவர் வரவில்லை என அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் நினைத்து கொண்டனர்.

இந்தநிலையில்தான் அவர் மாயமான 2 நாட்களுக்கு பிறகு அதே அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கழிவுநீர் தொட்டியில் கலா பிணமாக மீட்கப்பட்டு உள்ளது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கழிவுநீர் தொட்டியின் அருகே சுத்தம் செய்யும்போது, அதன் மூடி திறந்து கிடந்ததால் கலா நிலைதடுமாறி உள்ளே விழுந்து பலியாகி இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். எனினும் அவர் சாவுக்கு வேறு ஏதும் காரணமா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story