கணவரை கழுத்தை நெரித்து கொன்று கிணற்றில் குதித்து பெண் தற்கொலை


கணவரை கழுத்தை நெரித்து கொன்று கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 26 Aug 2023 11:30 PM GMT (Updated: 26 Aug 2023 11:31 PM GMT)

கணவரை கழுத்தை நெரித்து கொன்று விட்டு பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக்கொண்டார்.

எலக்ட்ரீசியன்

கிருஷ்ணகிரி மாவட்டம் கூடகாரசி கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது40). எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி ஜெயந்தி (38). இவர்களுக்கு சந்தோஷ் (18) என்ற மகனும், துர்கா (14) என்ற மகளும் உள்ளனர். இதில் சந்தோஷ் அப்பகுதியில் உள்ள தியேட்டரில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். துர்கா தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து ஜெகதாப் அரசு பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் ஜெயந்திக்கு அவ்வப்போது மனநிலை பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இயல்பான நிலையில் இருக்கும்போது ஜெயந்தி கணவருடன் அன்பாக இருப்பாராம். மனநிலை பாதிக்கப்படும்போது அவருடன் தகராறு செய்து வந்தாராம். இதற்கிடையே நேற்று முன்தினம் சந்தோஷ் தியேட்டருக்கு வேலைக்கு சென்று விட்டார்.

கணவன் கொலை

இரவு ஜெயந்திக்கு மனநிலை பாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அவர் கணவருடன் தகராறில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் தகராறு முற்றவே ஆத்திரமடைந்த ஜெயந்தி கணவர் என்றும் பாராமல் ரங்கசாமியின் கழுத்தை பிடித்து நெரித்தார். அதில் இருந்து மீளமுடியாமல் தவித்த அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இறந்த கணவரின் உடலை ஓரமாக வைத்து விட்டு ஜெயந்தி தூங்கிவிட்டார்.

கிணற்றில் குதித்து தற்கொலை

இதனைத்தொடர்ந்து நேற்று காலை பாட்டி வீட்டில் இருந்து துர்கா தனது வீட்டுக்கு வந்தார். அப்போது அங்கிருந்த ஜெயந்தியிடம் தந்தை எங்கே? என்று கேட்டதற்கு அவர் இனி வரமாட்டார் என்று கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த துர்கா அப்பகுதியில் உள்ள உறவினர்களை அழைத்து வர சென்றார்.

அதற்குள் ஜெயந்தி வீட்டுக்கு அருகில் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். பின்னர் துர்காவும், உறவினர்களும் வீட்டுக்கு வந்தபோது ரங்கசாமி கொலை செய்யப்பட்டு கிடந்ததையும், ஜெயந்தி கிணற்றில் பிணமாக மிதந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனா.

போலீசார் விசாரணை

இதுபற்றி தகவலறிந்து வந்த காவேரிப்பட்டிணம் போலீசார் கணவன், மனைவி இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story