டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு: தோமலஅள்ளியில் பெண்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு போலீசார் பேச்சுவார்த்தை
பாலக்கோடு அருகே தோமலஅள்ளியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பாலக்கோடு:
பாலக்கோடு அருகே தோமலஅள்ளியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
டாஸ்மாக் கடை
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த தோமலஅள்ளி கிராமத்தில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. இந்த நிலையில் தற்போது அதே பகுதியில் மீண்டும் டாஸ்மாக் கடை அமைக்கப்பட உள்ளதாக கிராம மக்களிடையே தகவல் பரவியது. இதற்காக கடை இருந்த இடத்தில் மதுபாட்டில்கள் லாரிகளில் கொண்டு வந்து இறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த தோமலஅள்ளி மற்றும் பக்கத்து கிராமங்களை சேர்ந்த பெண்களை டாஸ்மாக் கடை அமைய உள்ள பகுதிக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பாலக்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் மற்றும் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இப்பகுதியில் டாஸ்மாக் அடை அமைந்தால் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என கூறி பெண்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
எனினும் போலீசார் தோமலஅள்ளியில் டாஸ்மாக் கடை திறக்கப்படாது என உறுதி அளித்தனர். இதில் சமாதானம் அடைந்த பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து சுமார் 2 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது.