கரூர் கற்பகம் நகரில் சாலை அமைக்கும் பணி மீண்டும் தொடங்கப்படுமா?


கரூர் கற்பகம் நகரில் சாலை அமைக்கும் பணி மீண்டும் தொடங்கப்படுமா?
x

குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே கற்பகம் நகரில் சாலை அமைக்கும் பணி மீண்டும் தொடங்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கரூர்

கற்பகம் நகர்

கரூர் வெங்கக்கல்பட்டி அருகே கற்பகம் நகர் உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. வெங்கக்கல்பட்டியில் இருந்து ஏமூர் ஊராட்சி அலுவலகத்திற்கு செல்ல வேண்டுமானால் கற்பகம் நகர் வழியாகத்தான் செல்ல வேண்டும். இந்த வழியாக தினமும் ஏராளமான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தநிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி எல்லையில் இருந்து ஏமூர் ஊராட்சியை இணைக்கும் வகையில் தார்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.

இதற்காக அப்பகுதியில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. ஆனால், ஒருசில காரணங்களுக்காக சாலை அமைக்கும் பணிகள் திடீரென நிறுத்தப்பட்டன. அதன்பின் மழை போன்ற காரணங்களால் இந்த சாலை மிகவும் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளித்து வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட வர முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் இரவு நேரங்களில் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவ்வப்போது கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது-

குண்டும், குழியுமான சாலை

ராஜா:- கற்பகம் நகரில் ஏறக்குறைய 2 ஆண்டுகளாக சாலை பிரச்சினை உள்ளது. நான் வேலைக்கு செல்லவேண்டும் என்றால் மோட்டார் சைக்கிளில் இந்த சாலை வழியாக தான் செல்ல வேண்டும். ஆனால் இந்த சாலை மிகவும் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக இருப்பதால் அடிக்கடி டயர் பஞ்சராகி விடுகிறது. இதனால் காலையில் பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளை ஏற்றிச்செல்ல வரும் வேன்களும் எங்கள் பகுதிக்குள் வர மறுக்கின்றனர். இதுபற்றி காரணம் கேட்டால், வாகனம் சீக்கிரம் பழுதாகி விடுவதாக கூறுகின்றனா். மேலும் இந்த சாலையோரம் மின்விளக்கு சரிவர அமைக்கப்படாததால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண்கள் அச்சம்

முத்துலட்சுமி:- முன்பெல்லாம் இந்த சாலையில் நடு இரவில் கூட வரலாம். ஆனால் இப்போது பகலில் வரவே சிரமமாக உள்ளது. இந்த சாலை பணியை முழுவதுமாக முடிக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது நிலைத்தடுமாறி கீழே விழும் சூழ்நிலை உள்ளது. அதோடு இப்பகுதியில் தெருவிளக்கும் சரிவர இல்லை. இதனால் பெண்கள் இரவில் தனியாக செல்ல முடியாமல் அச்சம் அடைந்து வருகிறார்கள். மேலும் குழந்தைகளுக்காக கறவைப்பால் கொண்டு வருபவர்களும் சாலை மிகவும் மோசமாக இருப்பதால் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே வருகிறார்கள். இதனால் குழந்தைகளுக்கு பால் வாங்க முடியாமல் சிரமம் அடைந்து வருகிறோம். இதேபோல் அவசர தேவைக்கு இப்பகுதியில் ஆம்புலன்ஸ் வர முடியாத நிலை உள்ளது. எனவே இந்த சாலை பணியை விரைந்து முடித்து, தெருவிளக்குகளும் அமைத்து கொடுத்தால் நன்றாக இருக்கும்.

வாகனம் பழுதாகி வருகிறது

டெலிவரி வேலை செய்யும் நசீர்:- கற்பகம் நகர் பகுதிக்கு நான் கடந்த 3 ஆண்டுகளாக வந்து செல்கிறேன். இதில் சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சாலை மிகவும் குண்டும், குழியுமாக தான் உள்ளது. பொருட்களை டெலிவரி செய்ய வரும்போது எனது வாகனம் கூட சில நேரங்களில் பழுதாகி வருகிறது. இதனால் தேவையற்ற பொருட்செலவும், கால விரயமும் ஏற்படுகிறது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த பகுதியில் உள்ள பிரச்சினைகளை சரிசெய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story