பலரது வாழ்க்கை தரத்தை உயர்த்திய நூலகத்தின் தரம் உயருமா?
திருக்கோவிலூர் நூலகத்தில் இட நெருக்கடியால் புத்தகங்கள் பரன்மேல் போடப்பட்டுள்ளன. எனவே பலரது வாழ்க்கை தரத்தை உயர்த்திய நூலகத்தின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூரில் மிகவும் பழமை வாய்ந்த நூலகம் அமைந்துள்ளது. இங்குள்ள புத்தகங்களை படித்த பலரது வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது. ஆனால் இந்த நூலகம் மட்டும் இன்றும் தரம் உயராமல் இருக்கிறது. இந்த நூலகத்தில் மிகுந்த இடநெருக்கடி உள்ளதால், அங்கு படிக்க வரும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் பெரும் சிரமமடைந்து வருகின்றனர்.
தினசரி நூற்றுக்கணக்கான வாசகர்கள் வந்து செல்லும் நிலையில், இடநெருக்கடியால் அவர்களால் நூலகத்தில் நிற்கக்கூட முடியாத நிலை உள்ளது. இந்த நூலகத்தில் சுமார் 70 ஆயிரம் புத்தகங்கள் இருந்தும், அதனை முறையாக அடுக்கி வைக்க கூட இடமில்லை. இதனால் புத்தகங்களை கட்டு்க்கட்டாக கட்டி பரன்மேல் போட்டு வைத்துள்ளனர். பலரின் அறிவை வளர்ப்பதற்காக கொடுக்கப்பட்ட புத்தகங்கள், தற்போது யாருக்கும் பயனின்றி நூலகத்தில் தூங்குகிறது.
புதிய கட்டிடம் கட்ட வேண்டும்
இதுகுறித்து கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.ஜி.கணேஷ் கூறுகையில், திருக்கோவிலூரில் உள்ள நூலகத்திற்கு போதிய இடவசதி இல்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் இந்த நூலகத்தில் இருந்து புத்தகங்களை படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோல் வேலை தேடி அலையும் இளைஞர்கள், அரசு போட்டி தேர்வு தொடர்பான புத்தகங்களை படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அவர்கள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர். இதனால் திருக்கோவிலூர் நூலகம் யாருக்கும் பெரிய அளவில் பயனின்றி உள்ளது. இதை தவிர்க்க நூலகத்திற்கு அனைத்து வசதிகளுடன், புதிய நூலகம் கட்டிக்கொடுக்க வேண்டும். மேலும் நூலகத்திற்கு தேவையான பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என்றார்.
500 புத்தகங்களுடன் தொடங்கப்பட்ட...
வக்கீல் ராதாகிருஷ்ணன் கூறுகையில், திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ. நகரில் கடந்த 1955-ம் ஆண்டு தனியார் கட்டிடத்தில் சுமார் 500 புத்தகங்களுடன் நூலகம் தொடங்கப்பட்டது. அதன்பிறகு 1995-ம் ஆண்டு அரசு கட்டிடத்தில் செயல்படத் தொடங்கியது. பின்னர் அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் சிவராஜ் முயற்சியால், கடந்த 2005-ம் ஆண்டு அதே கட்டிடத்தில் மேல்மாடி கட்டப்பட்டது. தற்போது இந்த நூலகத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 142 ஆகும். சராசரியாக தினசரி 300-க்கும் அதிகமானவர்கள் வந்து செல்லும் நூலகத்தில் வாசகர்கள் அமர்ந்து படிக்க இடவசதி இல்லாததால் கடந்த 2011-ம் ஆண்டு அப்போதைய பேரூராட்சி மன்ற தலைவர் ஆண்டான் ராமநாதன், பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் நூலக கட்டிடம் கட்ட முயற்சி மேற்கொண்டார். ஆனால் பல்வேறு காரணங்களால் அங்கு பணிகள் நடக்க வில்லை. எனவே நூலகத்தின் பயனை பொதுமக்கள் முழுமையாக பெறும் வகையில் திருக்கோவிலூர் நூலகத்திற்கு கூடுதல் இடவசதியுடன் புதிய கட்டிடம் கட்டி தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர் என்றார்.