நெகமம் பஸ் நிலையம் மேம்படுத்தப்படுமா?

நெகமம் பஸ் நிலையத்தில் இருக்கை, குடிநீர் வசதி இல்லாததால் பயணிகள் அவதியடைகின்றனர். இந்த பஸ் நிலையம் மேம்படுத்தப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
நெகமம்,
நெகமம் பஸ் நிலையத்தில் இருக்கை, குடிநீர் வசதி இல்லாததால் பயணிகள் அவதியடைகின்றனர். இந்த பஸ் நிலையம் மேம்படுத்தப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
பஸ் நிலையம்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்டது நெகமம் பேரூராட்சி. இங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலானோர் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து வருகின்றனர். மேலும் சிலர் காட்டன் சேலை உற்பத்தி செய்து வருகிறார்கள். இங்கு நெசவு செய்யப்படும் காட்டன் சேலைகள் பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
மேலும் வெளிநாடு, வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. நெகமத்தை சுற்றி 35-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. நெகமத்தில் பஸ் நிலையம் உள்ளது. இங்கிருந்து பொதுமக்கள் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, உடுமலை, பல்லடம், திருப்பூர், கோவை, பழனி, வால்பாறை, ஆனைமலை, தாராபுரம், பெதப்பம்பட்டி, குடிமங்கலம், செஞ்சேரிமலை மற்றும் பல்வேறு இடங்களுக்கு அரசு பஸ்களில் சென்று வருகின்றனர்.
குடிநீர் வசதி
இதையடுத்து நெகமத்தில் இருந்து வெளியூர் செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருந்தது. இதை கருத்தில் கொண்டு கடந்த 2000-ம் ஆண்டு நெகமம்-தாராபுரம் ரோட்டில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த பஸ் நிலையம் அமைக்கப்பட்டு 22 ஆண்டுகளை கடந்தும், அங்கு பல்வேறு கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்படாமல் உள்ளது. பயணிகள் இருக்கை, குடிநீர் வசதி, கழிப்பறை போன்ற வசதிகள் இல்லை. இதனால் வெளியூர் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து பயணிகள் கூறுவதை பார்க்கலாம்.
வேகத்தடை அமைக்க வேண்டும்
ஜோத்தம்பட்டி ஜே.கே.நாகராஜன்:-
நெகமம் பஸ் நிலையத்தில் பயணிகள் அமர இருக்கை வசதி இல்லை. இதனால் பஸ்சுக்காக பெண்கள் கைக்குழந்தைகளுடன் நிற்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் முதியவர்கள் அமர இடமில்லாமல் கால் கடுக்க நிற்கின்றனர். எனவே, இருக்கை வசதி ஏற்படுத்த வேண்டும். மேலும் பஸ் நிலையத்தில் பஸ்கள் உள்ளே வந்து செல்ல போதிய இடவசதி இல்லை.
இதனால் உள்ளே சென்று விட்டு பஸ் வெளியே வரும்போது, டிரைவர்கள் பஸ்களை இயக்க திணறி வருகின்றனர். இதனால் போதிய இடவசதி செய்து தர வேண்டும். பஸ் நிலையம் முன்பு உள்ள மெயின் ரோட்டில் வேகத்தடை இல்லாததால், வாகனங்கள் வேகமாக இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பஸ்கள் திரும்பும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பஸ் நிலையம் முன்பு 2 இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
கூடுதல் பஸ்கள்
ரங்கம்புதூர் ஆனந்தகுமார்(தனியார் வாகன டிரைவர்):-
நெகமம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வேலை, அத்தியாவசிய தேவைகளுக்காக நெகமம் பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர். அங்கிருந்து பிற இடங்களுக்கு குறைவான பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. போதுமான பஸ் வசதி இல்லாததால், பயணிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, கிராம பகுதிகளுக்கு கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நின்று செல்லுமா...
வீதம்பட்டி ராஜேஸ்வரி(பஸ் நிலையத்தில் டெய்லர் கடை உரிமையாளர்):-
நெகமத்தில் கடந்த ஆண்டு புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. அங்கு போதுமான இடவசதி இருந்தும், வெளியூரில் இருந்து வரும் பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் நின்று செல்வது இல்லை. பஸ் நிலையம் முன்பு பயணிகளை இறக்கி விட்டு செல்கிறது. இதனால் பஸ் நிலையத்துக்குள் காத்திருக்கும் பயணிகள் ஓடி வந்து, பஸ்களில் ஏறும் நிலை உள்ளது.
சில நேரங்களில் ஓடி வருவதற்குள் பஸ்கள் சென்று விடுகின்றன. இதனால் பெண்கள் உள்ளிட்ட பயணிகள் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர். எனவே, போக்குவரத்து அதிகாரிகள் கண்காணித்து பஸ் நிலையத்துக்குள் வெளியூர் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கண்காணிப்பு கேமராக்கள்
நெகமம் வேணுகோபால்:-
நெகமம் பஸ் நிலையம் திறக்கப்பட்டும், அங்கு அடிப்படை வசதிகள் முழுமை பெறாமல் உள்ளன. குடிநீர், கழிப்பறை போன்ற வசதிகள் இல்லை. இதனால் தொலைதூர இடங்களில் இருந்து வரும் பயணிகள், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் சிரமம் அடைகின்றனர்.
வடமாநில தொழிலாளர்கள் ஆங்காங்கே நின்று, பல்வேறு இடங்களில் புகையிலை எச்சில் துப்பி வருகின்றனர். இதனால் சுகாதாரமற்ற நிலை காணப்படுகிறது. மேலும் பஸ் நிலையத்திற்குள் பயணிகள் நிற்கவே முகம் சுழிக்கின்றனர். ஆகவே, பஸ் நிலையத்தை சுகாதாரமாக வைப்பதோடு, குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். மேலும் பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகளை செய்து, மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.






