அரியலூர் தற்காலிக பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படுமா?


அரியலூர் தற்காலிக பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படுமா?
x

அரியலூர் தற்காலிக பஸ் நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலூர்

அரியலூர் பஸ் நிலையம்

அரியலூர் மாவட்டத்தில் 9 லட்சத்திற்கும் ேமற்பட்டோர் வசித்து வருகின்றனர். அரியலூரில் கடந்த 1975, 1988 மற்றும் 1995-ம் ஆண்டுகளில் 3 கட்டங்களாக சுமார் 3.04 ஏக்கர் பரப்பளவில் பஸ் நிலையம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்தநிலையில் இந்த பஸ் நிலைய கட்டிடம் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. இதையடுத்து, புதிய பஸ் நிலையம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தற்போது பழைய பஸ் நிலைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, சுமார் ரூ.7¾ கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், பொதுமக்களின் வசதிக்காக அரியலூர்-தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு கடந்த 7 மாதங்களாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால் இந்த தற்காலிக பஸ் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இல்லை என கூறப்படுகிறது. இங்கு சிறிய அளவிலான நிழற்குடைகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. இதனால் கொளுத்தும் வெயிலிலும், மழையிலும் நனைந்து பயணிகள் அவதிப்படுகின்றனர். மழையின் காரணமாக இந்த பஸ் நிலையம் முழுவதும் சேறும், சகதியுமாக மாறி பயணிகளுக்கு பல்வேறு இன்னல்களை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து பயணிகள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-

போதிய நிழற்குடை இல்லை

ஓட்டக்கோவில் பகுதியை சேர்ந்த செல்லப்பாண்டி:- அரியலூர் பழைய பஸ் நிலையத்தில் வருவது போன்று தற்காலிக பஸ் நிலையத்திற்கு போதுமான அளவில் பஸ்கள் வருவதில்லை. மேலும் வெளியூரில் இருந்து இங்கு வருபவர்கள் எந்த பஸ் எங்கு நிற்கும் என்று தெரியாமல் குழப்பமடைகின்றனர். அதோடு இங்கு புழுதிக்காற்று காரணமாக சரியாக வியாபாரம் செய்ய முடியவில்லை. போதுமான அளவில் நிழற்குடைகள் இல்லாததால் பயணிகள் மழையில் நனைந்து கொண்டே நிற்க வேண்டிய அவலநிலை உள்ளது. அதேபோல் இங்கு அமைக்கப்பட்டுள்ள கழிவறை சுகாதாரமின்றி காணப்படுகிறது. இவற்றையெல்லாம் சரிசெய்து, அதிக அளவில் நிழற்குடைகளும், சேறும், சகதியும் ஏற்படாதவாறு ஜல்லிக்கற்களும் கொட்டப்பட்டால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

பயணிகள் குழப்பம்

வாரணவாசி பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவர் பிரவீன்:- மழை பெய்தால் இந்த பஸ் நிலையத்தில் நிற்கவே முடியாது. சேறும், சகதியுமாக காட்சியளிக்கும். இதனால் பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வராமல் நெடுஞ்சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றுகின்றனர். இதன்காரணமாக விபத்து ஏற்படக்கூடிய அபாயமும் உள்ளது. மேலும் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஒரு சில பஸ்கள் இங்கு வருவதில்லை. இதனால் நிறைய வெளியூர் பயணிகள் குழப்பமடைகின்றனர். இங்கு அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டியில் சரிவர குடிநீர் வருவதில்லை. எனவே இவற்றை சரிசெய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விபத்து அபாயம்

மேலகருப்பூரை சேர்ந்த கூலித்தொழிலாளி பாரத்:- ஒரு சில பஸ்கள் இந்த பஸ் நிலையத்திற்கு வராமல் பழைய பஸ் நிலையம் அருகிலேயே திரும்பி சென்று விடுகிறது. இதனால் மீண்டும் வேறொரு பஸ்சில் ஏறி இங்கு வரவேண்டிய சூழல் உள்ளது. இதனால் நேரமும், பணமும் விரயமாகிறது. சில சமயங்களில் நெடுஞ்சாலையின் ஓரத்தில் பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் விபத்தும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இவற்றை தடுக்க புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மேலும் தற்காலிக பஸ் நிலையத்தின் உள்ளே தற்சமயம் சிமெண்டால் ஆன தளம் அல்லது ஜல்லிக்கற்களை கொட்டி சேறும், சகதியும் ஏற்படாதவாறு இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story