அதிமுக பொதுக்குழு கூட்டம் நடக்குமா..? எடப்பாடி பழனிசாமிக்கு ஒ.பன்னீர் செல்வம் பகிரங்க கடிதம்


அதிமுக பொதுக்குழு கூட்டம் நடக்குமா..? எடப்பாடி பழனிசாமிக்கு ஒ.பன்னீர் செல்வம் பகிரங்க கடிதம்
x
தினத்தந்தி 20 Jun 2022 12:51 PM IST (Updated: 20 Jun 2022 2:04 PM IST)
t-max-icont-min-icon

ஒற்றைத் தலைமை பிரச்சனை முடியாத நிலையில் பொதுக்குழுவை தள்ளிவைக்க வேண்டும் ஒ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இதன்படி ஒ.பன்னீர்செல்வம் உடனான ஆலோசனையில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன், தர்மர் ஆகியோர் பங்கேற்றனர். இதேபோல எடப்பாடி உடனான ஆலோசனையில் எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், காமராஜ், வளர்மதி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிலையில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை தற்போதைக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக ஒ.பன்னீர்செல்வத்திற்கு மாவட்ட செயலாளர்கள் எழுதிய கடிதத்தை அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் செய்தியாளர்களிடம் வாசித்து காட்டினார். அதில் அவர் கூறுகையில், "அசாதாரண சூழல் நிலவுவதால் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும். பொதுக்குழுவில் கடந்த கால நடைமுறைகள் பின்பற்றப்படாது என்று தொண்டர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

பொதுக்குழுவுக்கு சிறப்பு அழைப்பாளர்களை அழைப்பது காலங்காலமாக கடைபிடிக்கப்படும் நடைமுறை. ஆனால் பொதுக்குழு கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களை அழைக்காதது ஏன்?. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முன்னறிவிப்பு இல்லாமல் ஒற்றைத் தலைமை குறித்து கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

ஒற்றைத் தலைமை சர்ச்சையால் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது. கூட்டத்திற்கான பொருள் நிர்ணயம் செய்து நடத்துவது அவசியமாகிறது என்று சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்" என்று வைத்தியலிங்கம் கூறினார்.

மேலும் இதுதொடர்பாக பேசிய அவர், "அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஓ.பன்னீர் செல்வத்திற்கு எழுதிய கடிதம் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு 30 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு உள்ளது. 15 மாவட்ட செயலாளர்கள் நேரடியாக ஆதரித்துள்ளனர். 15 மாவட்ட செயலாளர்கள் நடுநிலை வகிக்கின்றனர். எடப்பாடி தரப்பு, சர்வாதிகார போக்குடன் ஒற்றைத் தலைமையை கொண்டுவர முயற்சிக்கிறது. கட்சி உடையாமல் இருக்க வேண்டும் என்பதே ஒ.பன்னீர்செல்வம் தரப்பின் எண்ணம். எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து பதில் வந்த பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று வைத்தியலிங்கம் கூறினார்.











Next Story