புதிதாக ரேஷன் கடை கட்டிடம் கட்டப்படுமா?


முதல்சேரி ஊராட்சியில் கஜா புயலில் இடிந்து விழுந்ததால் புதிதாக ரேஷன் கடை கட்டிடம் கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

தஞ்சாவூர்

கரம்பயம்:

முதல்சேரி ஊராட்சியில் கஜா புயலில் இடிந்து விழுந்ததால் புதிதாக ரேஷன் கடை கட்டிடம் கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கஜா புயலில் இடிந்து விழுந்தது

பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முதல்சேரி ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தின் அருகிலேயே ரேஷன் கடை இயங்கி வந்தது. இந்த ரேஷன் கடை கட்டிடம் கஜா புயலின் போது இடிந்து விழுந்து சேதம் அடைந்தது. இதனால் ரேஷன் பொருட்களை பாதுகாப்பாக வைக்க முடியாமல் வேறு இடத்திற்கு மாற்றி வைத்தனர்.

மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம்

தற்போது அருகில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தில் வைக்கப்பட்டு ரேஷன் கடை அங்கு இயங்கி வருகிறது. 723 குடும்ப அட்டைதாரர்கள் மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்திற்கு சென்று ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர். ஊரக வளர்ச்சி துறை மூலம் கட்டப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு கட்டிடங்களை வேறு எந்த பயன்பாட்டிற்கும் அனுமதிக்க கூடாது என்று மாநில மகளிர் மேப்பாட்டு நிறுவனம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் மூலம் ஊராட்சிகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளன.

புதிய ரேஷன் கடை கட்டித்தர வேண்டும்

இதன் காரணமாக மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்திலும் ரேஷன் பொருட்கள் வைக்க முடியாமல் தனியாக கட்டிடம் இல்லாமலும் முதல் சேரி ஊராட்சியில் ரேஷன் கடை நடத்துவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முதல்சேரி ஊராட்சியில் சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Next Story