ஊருக்குள் புகுந்து மக்களின் நிம்மதியை கெடுத்த காட்டு யானைகள் ; விரட்டியடித்த வனத்துறை
8 காட்டு யானைகளை பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து விரட்டியடித்தனர்.
கூடலூர்,
கூடலூர் பகுதியில் காட்டு யானைகளால் பிரச்சனை ஏற்படுவதால் பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் இடையே பனிப்போர் நிலவுகிறது. கூடலூர் வன அலுவலர் அலுவலகம் உள்ள மாக்கமூலா பகுதியில் 3 காட்டு யானைகள் முகாமிட்டு இருந்தது. இதனால் சுற்று வட்டார மக்கள் அச்சமடைந்தனர். தொடர்ந்து காட்டு யானைகளை விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இரவு முழுவதும் காட்டு யானைகள் அப்பகுதியில் முகாமிட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து வனத்துறையினர் விரைந்து வந்து பட்டாசுகளை வெடித்து காட்டு யானைகளை கூடலூர் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையை கடந்து அள்ளூர் வயல் வழியாக முதுமலை வனத்துக்குள் விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.
இதேபோல் கூடலூர் அருகே தேவர் சோலை பேரூராட்சிக்குட்பட்ட கல்லீங்கரை பகுதியில் 5 காட்டு யானைகள் முகாமிட்டு அப்பகுதியில் உள்ள விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தது.
மேலும் தினமும் காலையில் மற்றொரு காட்டு யானை மெயின் சாலை வழியாக நடந்து 4-ம் மைல் உள்ளிட்ட இடங்களுக்கு வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் காட்டு யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி இன்று காலையில் போராட்டம் நடத்த முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் பட்டாசுகளை வெடித்து 5 காட்டு யானைகளை வனத்துக்குள் விரட்டியடித்தனர்.