மாவட்டத்தில் பரவலாக மழை
புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.
பரவலான மழை
தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் புதுக்கோட்டையில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்திலும் ஆங்காங்கே மழை பெய்தது. காலை 10.30 மணிக்கு மேல் மழை நின்றது. இருப்பினும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் மாலை 6 மணிக்கு மேல் லேசாக தூறல் மழை பெய்தது. இந்த மழையினால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அன்னவாசல்
அன்னவாசல் சுற்றுவட்டார பகுதிகளான மலைக்குடிப்பட்டி, இலுப்பூர், முக்கண்ணாமலைப்பட்டி, சித்தன்னவாசல், குடுமியான்மலை, பெருஞ்சுனை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை முதல் தொடர்ந்து லேசான மழை பெய்தது. தொடர்ந்து பெய்த மழையால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் பலர் மழையில் நனைந்த படியும், சில பெற்றோர் தங்களது குழந்தைகளை பாதுகாப்பாக பள்ளிக்கு அழைத்து சென்றனர்.
கோட்டைப்பட்டினம்
புதுக்கோட்டை மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளான கோட்டைப்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போதுமான மழை இல்லை. இதனால் விவசாயிகள் நாற்று நடவு செய்து கவலையுடன் இருந்து வந்தனர். இந்நிலையில் கோட்டைப்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் ஏரி, குளங்களில் கணிசமாக தண்ணீர் நிறைந்தது. மேலும் வயல்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.