ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது ஏன்? வெளியான பரபரப்பு தகவல்கள்


ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது ஏன்? வெளியான பரபரப்பு தகவல்கள்
x

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு சென்னை பெரம்பூரில் புதிதாக கட்டப்படும் அவரது வீடு அருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் அவரை கழுத்து, தலை ஆகிய இடங்களில் சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டு தப்பியோடி விட்டனர். அவர் கொலை செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

ஆம்ஸ்ட்ராங் தினமும் இரவு தூங்கச்செல்வதற்கு முன்பு தனது நண்பர்கள் மற்றும் கட்சியை சேர்ந்தவர்களோடு தனது வீடு அருகே நின்று ஜாலியாக பேசிக்கொண்டிருப்பார். குறிப்பாக அரசியல் நிலவரங்கள் குறித்து பேசுவார். அவ்வாறு நேற்று பேசிக்கொண்டிருக்கும்போதுதான் அவர் வெட்டிக்கொல்லப்பட்டார். கொலையாளிகளை பிடிக்க அங்கிருந்த அவர்களது நண்பர்களும், கட்சியினரும் விரட்டி சென்றனர். ஆனால் கொலையாளிகள் அவர்களது கையில் சிக்காமல் தப்பி ஓடிவிட்டனர்.

ஆம்ஸ்ட்ராங்கை உடனடியாக ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஆம்ஸ்ட்ராங் உடல் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் வக்கீலுக்கு படித்தவர். அவர் எப்போதும் வெள்ளை நிற பேண்ட், சட்டைதான் அணிந்திருப்பார்.

2000-ம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் இறங்கினார். 2006-ம் ஆண்டு மாநகராட்சி கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பல்வேறு வழக்குகளில் சிக்கிய அவர் கடும் சட்டப்போராட்டம் நடத்தி பின்னர் அந்த வழக்குகளில் இருந்து விடுதலையானார். இதனால், அவருக்கு எப்போதும் கொலை மிரட்டல்கள் இருந்தவாறு இருந்தது. முன்விரோதம் காரணமாகவே அவர் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டுமென கருதுகிறோம். 2023-ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்திற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்று கருதுகிறோம். கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம்.

ஆம்ஸ்ட்ராங் அவரது கட்சியின் அகில இந்திய தலைவியும், உத்தர பிரதேச முன்னாள் முதல் மந்திரியுமான மாயாவதியை வைத்து சென்னை அமைந்தகரையில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்தினார். அதன் பிறகுதான் அவர் புகழ்பெற்றார். அவருக்கு எதிரிகளும் அதிகமானார்கள்' இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Next Story