பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரை கவர்னர் சந்தித்தது ஏன்? கி.வீரமணி கேள்வி


பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரை கவர்னர் சந்தித்தது ஏன்? கி.வீரமணி கேள்வி
x

முறைகேடு புகாரில் சிக்கிய சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரை கவர்னர் சந்தித்தது ஏன்? என்று கோவையில் கி.வீரமணி கேள்வி எழுப்பினார்.

கோவை,

கோவை வந்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோவிலை நம்பி வாக்குகளை பெற தேர்தலை நடத்தலாம் என பிரதமர் நம்பிக்கொண்டிருக்கிறார். அதை மக்கள் மத்தியில் தெளிவாக விளக்க இந்தியா கூட்டணி தயாராகி கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் நடந்த வெள்ளச்சேத பேரிடரையும் அவர் கண்டுகொள்ளவில்லை. எந்த நாட்டிலும் கோவிலுக்காக பிரதமர் அடிக்கல் நாட்டி, அதனை திறந்து யாரும் பார்த்தது இல்லை. இந்திய அரசியல் சட்டத்தை காப்பாற்ற வேண்டும். இந்த அரசு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் மனுதர்மம் தான் அரசியல் சட்டமாக்கப்படுமே தவிர வேறு இல்லை.

துணைவேந்தரை கவர்னர் சந்தித்தது ஏன்?

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி சென்ற விவகாரத்தில் கவர்னர் எப்படி நடந்து கொள்கிறார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள நல்ல வாய்ப்பு. அரசியல் அமைப்பு சட்டம் 162-ன் படி கவர்னர் மாநில அரசின் ஒரு பகுதி மட்டுமே. ஒருவர் மீது அரசு வழக்கு போட்டுள்ளபோது கவர்னர் அந்த நபர் அருகில் கூட செல்ல கூடாது. அப்படி இருக்கும்போது முறைகேடு புகாரில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்துள்ள துணைவேந்தரை, கவர்னர் சென்று சந்தித்து விசாரிக்கிறார் என்றால் என்ன அர்த்தம். அந்த வழக்கை ஒன்றுமில்லாமல் மாற்றவும், அதை மறைப்பதற்காகவும்தான் சென்றாரா?.

இதை அதிகாரிகள் பார்க்கும்போது கவர்னரே துணைவேந்தருடன் இருக்கிறார் என்று அச்சப்படுவார்கள். இந்த விவகாரத்திலும் கவர்னர் ஆர்.என்.ரவி, தனது அரசியலை நடைமுறைபடுத்துகிறார். இதனால் தான் மாணவர்கள் கவர்னரை எதிர்த்து கண்டனங்களை வெளிப்படுத்தினர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story