அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி
தமிழக அரசு அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பினார்.
திருமங்கலம்
கூட்டம்
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், கள்ளிக்குடி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி கூட்டம் நடந்தது. கள்ளிக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் வேப்பங்குளம் கண்ணன் தலைமை தாங்கினார். கூடக்கோவில், மேலஉப்பிலிகுண்டு, கல்லணை, கொக்குளம், வேப்பங்குளம், மருதங்குடி குராயூர் ஆகிய பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மக்களுக்கான திட்டங்களை வழங்கினார்கள். அதில் எதுவும் பாரபட்சம் பார்க்கவில்லை. இன்றைக்கு மு.க.ஸ்டாலின் பாரபட்சம் பார்த்து வருகிறார். எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சும், ஆளுங்கட்சியாக வந்த பிறகும் மாறி,மாறி பேசி வருகிறார். எதிர்க்கட்சியாக இருக்கும்போது அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.1000 உரிமை தொகையை வழங்குவோம் என்று கூறிவிட்டு, தற்போது அனைத்து குடும்பங்களுக்கும் கொடுக்க மனம் வரவில்லை. காரணம் கேட்டால், நிதி பற்றாக்குறை என்று கூறுகிறார்கள். ஆனால் எழுதாத பேனாவிற்கு ரூ.84 கோடி ஒதுக்கீடு செய்கிறார்கள். தனது தந்தை பெயரில் நூலகம் கட்ட பல நூறு கோடியை ஒதுக்கீடு செய்கிறார். ஏழை, எளிய மக்களில் ஒருவருக்கு கொடுத்து விட்டு மற்றவருக்கு கொடுக்காமல் இருப்பது எந்த வகையில் நியாயம்.
சர்வாதிகார போக்கு
ஆசிரியர்கள் போராட்டம், டெல்டா விவசாயிகள் போராட்டம், மாணவர்கள் போராட்டம், குடிதண்ணீர் கேட்டு போராட்டம் என எங்கு பார்த்தாலும் போராட்ட களமாக உள்ளது. எதிர்த்து கேட்டால் கைது செய்கின்றனர். ஆசிரியர்களை கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். உரிமைக்காக போராடும் மக்களிடத்தில் சர்வாதிகார போக்கை கையாள்வது கொடுமையாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் ஒன்றிய செயலாளர்கள் பிரபு சங்கர், ராமையா, அவைத்தலைவர் முருகன், மாவட்ட மீனவர் அணி செயலாளர் சவுடார்பட்டி சரவணன், கலைப்பிரிவு மாவட்ட செயலாளர் வாகைகுளம் சிவசக்தி, பொதுக்குழு உறுப்பினர் சுமதி சாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக புதிதாக நியமிக்கப்பட்ட கள்ளிக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் வேப்பங்குளம் கண்ணனை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிமுகப்படுத்தினார். மேலும் கள்ளிக்குடி ஒன்றியத்தில் புதிய வாக்காளர் சேர்க்கை முகாம் படிவத்தை முன்னாள் அமைச்சர்ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.