செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை யார் விசாரிப்பது? - தலைமை நீதிபதியிடம் முறையிட உத்தரவு


செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை யார் விசாரிப்பது? - தலைமை நீதிபதியிடம் முறையிட உத்தரவு
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 31 Aug 2023 11:59 AM IST (Updated: 31 Aug 2023 1:14 PM IST)
t-max-icont-min-icon

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தொடர்பாக ஐகோர்ட்டு தலைமை நீதிபதியிடம் முறையிட நீதிபதி எம்.சுந்தர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருந்து வரும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு 120 பக்க குற்றப்பத்திரிகை நகல் மற்றும் 3 ஆயிரம் பக்க வழக்கு ஆவணங்களை கடந்த 28-ந் தேதி வழங்கியது.

அன்றைய தினமே அதே கோர்ட்டில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார். 'செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டம் என்ற சிறப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதால் சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில்தான் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்ய வேண்டும்' எனக்கூறி அந்த மனுவை சிறப்பு கோர்ட்டு நீதிபதி திரும்ப அனுப்பி உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி எஸ்.அல்லி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரிக்க தனக்கு அதிகாரம் இல்லை என்றும், சிறப்பு கோர்ட்டுதான் விசாரிக்க வேண்டும் என்றும், எனவே, சிறப்பு கோர்ட்டில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்து பரிகாரம் தேடிக்கொள்ளும்படியும் செந்தில் பாலாஜி தரப்புக்கு அறிவுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பு வக்கீல்கள் அருண், பரணிகுமார் ஆகியோர் சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு கோர்ட்டில் நீதிபதி ரவியிடம், செந்தில் பாலாஜி ஜாமீன் விவகாரம் தொடர்பாக சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டு நீதிபதி தெரிவித்த கருத்துகளை கூறி ஜாமீன் விவகாரம் தொடர்பாக முறையிட்டனர். மேலும் அவர்கள், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டனர்.

அதற்கு நீதிபதி, 'இந்த விவகாரத்தில் தெளிவான விளக்கம் தேவைப்படுகிறது. இதுபோன்ற வழக்குகளில் ஜாமீன் மனுவை சிறப்பு கோர்ட்டுதான் விசாரிக்க வேண்டும் என்பது தொடர்பான அறிவிப்பாணை எதுவும் இருப்பதாக தெரியவில்லை' என தெரிவித்தார். மேலும், இதுதொடர்பாக ஐகோர்ட்டை அணுகி உரிய விளக்கம் பெற்று வரும்படியும், ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் ஜாமீன் மனுவை இந்த கோர்ட்டு விசாரிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறினார்.

அதன்படி ஐகோர்ட்டில் நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் ஆர்.சக்திவேல் அடங்கிய அமர்வில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ இன்று முறையீடு செய்தார். இந்த இரண்டு கோர்ட்டில் எந்த கோர்ட்டு ஜாமீன் மனுவை விசாரிக்க வேண்டும் என்று சிக்கல் எழுந்துள்ளது. அதை தெளிவுபடுத்துவதற்காக இந்த மனு தாக்கல் செய்துள்ளதாகவும் இதை விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.சுந்தர், செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தொடர்பாக ஐகோர்ட்டு தலைமை நீதிபதியிடம் முறையிட உத்தரவிட்டுள்ளார். எந்த கோர்ட்டு விசாரிக்க வேண்டும் என்பதை தலைமை நீதிபதிதான் முடிவு செய்வார் என்றும் அவர் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.


Next Story