அதிமுகவை காப்பாற்றியது யார்? - சசிகலா மீது எடப்பாடி பழனிசாமி தாக்கு
அதிமுகவிற்கு யார் துரோகம் செய்தாலும் ஓபிஎஸ் நிலைமைதான் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தஞ்சை,
தஞ்சையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
அதிமுகவில் ஒரு சாதி ஆதிக்கம் செலுத்துவதாக சசிகலா எப்படி சொல்கிறார். அதிமுகவில் சாதிக்கு இடம் கிடையாது. சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி அதிமுக. 2021-ல் அரசியலில் இருந்து ஓய்வு என கூறிய சசிகலா இப்போது ஏன் வருகிறார். அதிமுகவை காப்பாற்றுவேன் என சசிகலா கூறுவது, 3 ஆண்டுகள் வேலைக்கு செல்லாமல் திடீரென வேலைக்கு செல்வதுபோல் உள்ளது. இத்தனை நாட்களாக அதிமுகவை காப்பாற்றியது தொண்டர்கள். அதிமுகவில் எந்த சரிவும் இல்லை; தோல்வியை சந்திக்காத அரசியல் கட்சி எது?.
இரட்டை இலையை எதிர்த்து போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வத்தை எப்படி கட்சியில் மீண்டும் சேர்க்க முடியும். மத்திய மந்திரி ஆகலாம் என்ற சுயநலத்தில் பாஜகவில் இணைந்து ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டார்; ஆனால் அவருக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளனர். அதிமுகவிற்கு எப்போதுமே விசுவாசம் இல்லாத நபர் ஓ.பன்னீர்செல்வம். அதிமுகவிற்கு யார் துரோகம் செய்தாலும் ஓபிஎஸ் நிலைமைதான்.
அதிமுக ஆட்சியில் இயற்கை பேரிடர் காலங்களில் ஹெக்டேருக்கு ரூ.20,000 வழங்கப்பட்டது. குறுவை காப்பீடு திட்டத்தில் விவசாயிகளை திமுக அரசு சேர்க்கவில்லை, அதனால் விவசாயிகளுக்கு காப்பீடு கிடைக்கவில்லை. டெல்டா மாவட்டங்களில் விவசாய பிரச்சினைகள் இருந்து வருகிறது. கடந்த ஒரு ஆண்டாக விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு முழுமையாக தண்ணீர் கிடைக்காத காரணத்தால் 3 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் காய்ந்து கருகி வீணாகி போயின.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 4 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வருகின்றன. திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து கள்ளச்சாராய உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. கள்ளச்சாராயத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.