தமிழ்நாட்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்.. யார்? - இன்று வெளியாகிறது பட்டியல்
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
சென்னை,
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் மாநில தேர்தல் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிரிவெல்ல பிரசாத் முன்னிலை வகித்தார்.
பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, "தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் குழு கூட்டத்தில், வேட்பாளர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையின் அடிப்படையில் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் கலந்துரையாட உள்ளோம். இன்று (வியாழக்கிழமை) டெல்லியில் மத்திய தேர்தல் குழு தலைவர்களின் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் வேட்பாளர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டு இன்று இரவுக்குள் பட்டியல் வெளியிடப்படும். ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு 3 பேரை வேட்பாளராக பரிந்துரை செய்துள்ளோம்.
இதேபோல, பிரதமர் மோடி கலந்துகொண்ட மாநாட்டில் ஓ.பன்னீர் செல்வம், டி.டி.வி.தினகரனை மேடையில் வைத்துக்கொண்டு பா.ஜனதா தலைவர்கள் திராவிட கட்சிகளை ஒழிப்போம் என்று கூறுகிறார்கள். எனவே, திராவிட இயக்கத்தை ஒழிக்க நினைக்கும் பா.ஜனதாவுக்கு டி.டி.வி.தினகரனும், ஓ.பன்னீர் செல்வமும் உறுதுணையாக இருக்கிறார்களா என்று அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.
இதேபோல, ஜி.கே.வாசன், அன்புமணி ராமதாசை மேடையில் வைத்துக்கொண்டு வாரிசு அரசியலை ஒழிப்போம் என்கிறார்கள். இதற்கு அவர்களும் பதில் சொல்ல வேண்டும்.
ராகுல் காந்தியும், மல்லிகார்ஜுன கார்கேவும் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்கள். கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெறும் அனைத்து கூட்டங்களிலும் கலந்துகொள்வார்கள். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை வரவேற்கிறோம். 400 இடங்களில் வெற்றி பெறுவதே எங்கள் இலக்கு. இந்தியா கூட்டணி ஒற்றுமையாக உள்ளோம். வயநாட்டில் ராகுல் காந்தி வெற்றி பெறுவார். ஒருவேளை தமிழகத்தில் போட்டியிட்டாலும் அவர் வெற்றி பெறுவார்" என்று அவர் கூறினார்.