சாலையில் கவிழ்ந்த ஆட்டோவை மீட்ட போது டிரைவர்கள் 2 பேர் லாரி மோதி பலி - உதவி செய்தவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்


x

ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்த ஆட்டோவை மீட்க சென்ற 5 பேர் மீது லாரி மோதியது. இதில் காப்பாற்ற சென்ற 2 டிரைவர்கள் உயிரிழந்தனர்.

ஆம்பூர்:

வேலூர் அருகே உள்ள பொய்கையைச் சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 30) ஆட்டோ டிரைவர். இவர் நேற்று நள்ளிரவு மாதனூரில் இருந்து ஆம்பூர் நோக்கி ஆட்டோ ஓட்டி சென்று கொண்டிருந்தார். உடைய ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது ஆட்டோ நிலை தடுமாறி சாலை நடுவில் உள்ள தடுப்பில் மோதி கவிழ்ந்தது.

அந்த நேரத்தில் குடியாத்தம் அருகே உள்ள மேல்மாயிலை சேர்ந்த டிரைவர் சரவணன் (38) என்பவர் லாரியில் கோழிலோடு ஏற்றிக்கொண்டு ஆம்பூர் நோக்கி சென்றார். அதில் கிளீனர் சுந்தரமூர்த்தி (38) என்பவரும் இருந்தார். எதிர் திசையில் ஆம்பூரில் இருந்து வேலூர் நோக்கி அரிசி லாரி ஒன்று வந்தது. அதில் டிரைவர் ராஜா (50) கிளீனர் கிருஷ்ணன் (33)ஆகியோர் வந்தனர்.

உடனே 2 லாரிகளையும் நிறுத்திவிட்டு டிரைவர் கிளீனர்கள் ஆட்டோவில் சிக்கிய வினோத்குமாரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில் பைக்கில் வந்த சீனிவாசன் என்ற வாலிபரும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு மீட்பு பணியில் ஈடுபட்டார். 5 பேரும் சேர்ந்து கவிழ்ந்து கிடந்த ஆட்டோவை தூக்க முயற்சி செய்தனர்.

அந்த நேரத்தில் வேலூரில் இருந்து ஆம்பூர் நோக்கி வேகமாக லாரி ஒன்று மீட்பு பணியில் இருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 5 பேரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயமடைந்த லாரி டிரைவர்கள் சரவணன், ராஜா ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தனர்.

ஆட்டோவில் இருந்த வினோத்குமார் மற்றும் கிளீனர்கள், பைக்கில் வந்த வாலிபர் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவர்கள் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் பலியான 2 டிரைவர்கள் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சிக்கியவரை மீட்க சென்றவர்கள் மீது லாரி மோதி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story