காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை திறப்பது எப்போது..?


காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை திறப்பது எப்போது..?
x

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்ததால், அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகிறது

மேட்டூர்,

கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கர்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி தனது முழு கொள்ளளவை எட்டின.

இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 58 ஆயிரத்து 869 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு சீறிப்பாய்ந்து வருகிறது. அப்படி கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவானது குறைவதும், அதிகரிப்பதுமாக இருக்கிறது.

அந்த வகையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் இரவு வினாடிக்கு 77 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. அது நேற்று வினாடிக்கு 53 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தண்ணீர் அதிகமாக விழுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்து நீடிக்கிறது. காவிரி ஆற்றில் நீர் வரத்தை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்ததால் கடந்த 15 நாட்களாக அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 77 அடியாக இருந்தது.

அணைக்கு நேற்று இரவு வினாடிக்கு 69 ஆயிரத்து 117 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 85 அடியை தாண்டியது. அணையின் நீர் இருப்பு 46 டி.எம்.சி.யாக (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) உள்ளது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

டெல்டா பாசனத்திற்கு கடந்த ஜூன் மாதம் 12-தேதி தண்ணீர் திறந்திருக்க வேண்டும். ஆனால் நீர்மட்டம் மிக குறைவாக இருந்ததால் திறக்கப்படவில்லை. தற்போது தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என்றால் அணையின் நீர்மட்டம் 90 அடியாகவும், நீர்வரத்து தொடர்ந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாகவும் இருக்க வேண்டும். அப்படி இருக்கும்பட்சத்தில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

தற்போது மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை கணக்கிட்டு பார்க்கும் போது நீர்வரத்து தொடர்ந்து இதேநிலை நீடித்தால் இன்னும் 4 அல்லது 5 நாட்களில் அணையின் நீர்மட்டம் 100 அடியாக உயர வாய்ப்புள்ளது. அப்போது அணையில் நீர் இருப்பு 60 டி.எம்.சி.யாக இருக்கும்.

எனவே மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டும் போது நீர்வளத்துறை அதிகாரிகளுடன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது குறித்து முடிவு செய்வார் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.


Next Story