நீச்சல் குளம் மீண்டும் பயன்பாட்டிற்கு வருவது எப்போது?
நீச்சல் குளம் மீண்டும் பயன்பாட்டிற்கு வருவது எப்போது? என்று மாணவ-மாணவிகள் எதிர்பார்க்கின்றனர்.
நீச்சல் குளம்
அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்காகவும், விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காகவும் கடந்த 2004-ம் ஆண்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அரியலூரில் உள்ள செந்துறை சாலையில் 18 ஏக்கர் பரப்பளவில் ரூ.96 லட்சம் மதிப்பில் மாவட்ட விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டது. இந்த மைதானத்தில் தடகளம், ஆக்கி, கால்பந்து, கைப்பந்து, ஸ்கேட்டிங், கூடைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் மாவட்ட விளையாட்டு துறை சார்பில் ஒரே நேரத்தில் நடத்தப்படுகின்றன.
மேலும் பொதுமக்கள் விடுத்த கோரிக்கையையடுத்து விளையாட்டு மைதானத்திலேயே நீச்சல் குளமும் அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 11.11.2013-ம் ஆண்டு முதல் இந்த நீச்சல் குளத்தில் சிறுவர்கள், பொதுமக்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இதில் சிறுவர், சிறுமிகள், ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது.
பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்
இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக இந்த நீச்சல் குளம் மூடப்பட்டது. தற்போது தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்ட பின்னரும் நீச்சல் குளம் திறக்கப்படாமலேயே உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் நீச்சல் பயிற்சி பெற முடியாத நிலை உள்ளது. மேலும் நீச்சல் குளம் செல்லும் பாதையில் பதிக்கப்பட்ட கற்கள் பெயர்ந்தும், நீச்சல் குளத்தை சுற்றி முட்செடிகள், புதர்கள் மண்டியும் கிடப்பதால், பாம்பு மற்றும் விஷ ஜந்துகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.
எனவே புதர்கள் உள்ளிட்டவற்றை அகற்றி, பாதையில் பதிக்கப்பட்டுள்ள கற்களை சரிசெய்து, நீச்சல் குளத்தை திறந்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் எதிர்பார்க்கின்றனர்.
மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி
இது குறித்து சமூக ஆர்வலர் அருணன் கூறியதாவது:- அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தினமும் மக்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த அரங்கு பல்வேறு விளையாட்டு வீரர்களை உருவாக்கும் தளமாக உள்ளது. தற்போது இங்கு மேம்பாட்டு பணி நடைபெற்று வருகிறது. அதனை விரைந்து முடிக்க வேண்டும். மேலும் இந்த மைதானத்தை நவீன வசதிகளை கொண்ட விளையாட்டு மைதானமாக மாற்றி அமைக்க வேண்டும். இதற்கு தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். மூடப்பட்டுள்ள நீச்சல்குளத்தை உடனடியாக மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அவ்வாறு கொண்டு வந்தால் மாணவ, மாணவிகள் நீச்சல் பயிற்சி பெற்று, போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பாக அமையும். மேலும் விளையாட்டு விடுதி மாணவர்களின் விடுதி வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
பயனடைவார்கள்
அரியலூரை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியின் தாயான மகேஸ்வரி கூறியதாவது:- கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட பின்னரும், இந்த நீச்சல் குளம் திறக்கப்படவில்லை. இந்த நீச்சல் குளத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து, நீச்சல் பயிற்சி அளித்தால் நீச்சல் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்களும், இளைஞர்களும் பயனடைவார்கள். தற்போது நீச்சல் குளம் மூடியிருப்பதால், விடுமுறை நாட்களில் ஏரி, குளங்களில் நீச்சல் பயிற்சியில் ஈடுபடும் இளைஞர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரை இழக்கும் அபாய நிலை உள்ளது. எனவே உடனடியாக இந்த நீச்சல் குளத்தை திறக்க வேண்டும்.