சட்டசபையில் தேசிய கீதத்துக்கு மரியாதை தராமல் 'நாட்டையே கவர்னர் அவமானப்படுத்திவிட்டார்' - சபாநாயகர் அப்பாவு


சட்டசபையில் தேசிய கீதத்துக்கு மரியாதை தராமல் நாட்டையே கவர்னர் அவமானப்படுத்திவிட்டார் - சபாநாயகர் அப்பாவு
x

சட்டசபையில் தேசிய கீதத்துக்கு மரியாதை தராமல் இந்த நாட்டையே கவர்னர் ஆர்.என்.ரவி அவமானப்படுத்திவிட்டார் என்று சபாநாயகர் அப்பாவு வேதனை தெரிவித்தார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு அளித்த பேட்டி வருமாறு:-

அவைக்குறிப்பு

தமிழக அரசு 5-ந்தேதி அனுப்பிய கவர்னர் உரையை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டு 7-ந்தேதி திருப்பி அனுப்பினார். ஆனால் அதை அவையில் வாசித்தபோது பல பகுதிகளை விட்டும், சில பகுதிகளை புதிதாக சேர்த்தும் வாசித்தார்.

அது தவறு என்பதால், ஒப்புதல் பெறப்பட்ட உரையைத் தவிர மற்ற வாசகங்களை பிரசுரிக்க வேண்டாம் என்று அவையில் முதல்-அமைச்சர் தீர்மானம் கொண்டுவந்தார். அதை அவை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது. நாங்கள் எதையும் நீக்கவும், சேர்க்கவும் இல்லை. ஒப்புதல் பெறப்பட்ட உரையில் என்ன உள்ளதோ, அதுதான் அவைக்குறிப்பில் இருக்கும்.

வேதனை

கவர்னர் உரை முடிந்தபிறகு, நாட்டுக்கு மரியாதை செலுத்தும்விதத்தில் தேசிய கீதம் பாடப்படும். அதுவரை இருந்துவிட்டு செல்வதுதான் மரபு. சட்டசபையில் உரையாற்ற கவர்னர்களுக்கு அரசியல் சாசனம் அனுமதி அளித்துள்ளது. அந்த சாசனத்தை உருவாக்கிய அம்பேத்காரின் பெயரையும் கவர்னர் வாசிக்கவில்லை.

இப்படி பல பிரச்சினைகளை கவர்னர் உருவாக்கியுள்ளார் என்பது வேதனையான விஷயம். அரசியல் சாசனத்தின்படி பதவிப்பிரமாணம் எடுத்து மிகப்பெரிய பதவியில் இருக்கும் அவர் அந்த சாசனத்தின் ஒவ்வொரு ஷரத்தையும் பாதுகாக்க வேண்டும்.

பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கவர்னர்கள் இப்படித்தான் நடந்துகொள்கின்றனர். கவர்னர் உரையில் மாற்றம் வேண்டும் என்றால் அரசிடம் அவர் முன்பே கூறியிருக்கலாம். அப்படி செய்யாமல் பொதுமேடையில் பேசுவதுபோல் பேசுவது சரியல்ல.

உயர்பதவிக்காக...

தமிழகம் போன்ற முற்போக்கு சிந்தனையுள்ள, பா.ஜ.க. ஆட்சி அல்லாத மாநில சட்டசபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு கவர்னர்கள் ஒப்புதல் அளிப்பதில்லை.

மத்திய அரசை திருப்திப்படுத்துவதற்காக இப்படி எதையாவது செய்தால் உயர்பதவி கிடைக்கும் என்ற நோக்கத்தில் இருக்கிறாரோ என தெரியவில்லை. மேற்கு வங்காளத்தில் கவர்னராக இருந்த ஜெகதீப் தன்கர், ஆளுங்கட்சிக்கு விரோதமாக சட்டசபையில் பல இடையூறுகளை வெளிப்படையாகவே செய்தார். பிறகு அவருக்கு துணை ஜனாதிபதி பதவி கிடைத்தது.

நாட்டுக்கு அவமானம்

இதில் பல உதாரணங்களை சொல்ல முடியும். சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி சதாசிவத்துக்கு கேரள மாநில கவர்னர் பதவி கிடைத்தது. மற்றொரு தலைமை நீதிபதிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தரப்பட்டது.

எந்த அளவுக்கு மாநில அரசை எதிர்க்கிறார்களோ அந்த அளவுக்கு கவர்னர்களுக்கு அங்கு கவுரவம் கிடைக்கிறதோ என்ற சந்தேகம் உள்ளது.

தேசிய கீதத்துக்கு மரியாதை கொடுத்துவிட்டு சென்றிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். அப்படியில்லாமல் இந்த நாட்டையே அவர் அவமானப்படுத்திவிட்டார்.

முதல்-அமைச்சர் செயல்பாடு

கவர்னர் நடந்துகொண்டது சரியா, அரசு நடந்துகொண்டது சரியா என்று பார்க்க வேண்டும். அரசு 100 சதவீதம் அமைதி காத்தது. வார்த்தைகளை அவர் விட்டுவிட்டு பேசும்போதும், இல்லாத வார்த்தைகளை கூறும்போதும் யாருமே குறுக்கிடவில்லை. உரை முடிந்த பிறகுதான் முதல்-அமைச்சர் பேசினார்.

ஒப்புதல் பெற்ற உரையில் இல்லாத வார்த்தைகள் நாளை பத்திரிகைகளில் வெளியாகிவிடக் கூடாது என்பதால்தான் முதல்-அமைச்சர் உடனடியாக செயல்பட்டார். அப்போதும் கண்ணியத்தோடு பேசினார்.

அடுத்த ஆண்டும் கவர்னர் உரையுடன்தான் கூட்டத்தொடர் தொடங்குமா என்று கேட்டால், நீங்கள் அவரை திருந்த விடமாட்டீர்களா? அவர் பீகார் தேர்தலில் முதல்-மந்திரி வேட்பாளராகக்கூட போய்விடக்கூடும்.

சாசனத்துக்கு முரண்

கவர்னர் ஏற்கனவே அரசியல் சாசனத்துக்கு முரண்பட்ட கருத்துகளை வெளியே கூறிவருகிறார். அரசு அவரைப் பற்றி எதுவும் கூறவில்லை. அரசியல் சாசனத்தில் இடம்பெற்றிருந்த, 'இந்தி ஆட்சிமொழி' என்ற வாசகத்தை பேராசிரியர் அன்பழகன் தலைமையில் 10 பேர் பொதுவெளியில் கிழித்து தீவைத்தனர்.

அப்போது எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராகவும், பி.எச்.பாண்டியன் சபாநாயகராகவும் இருந்தனர். அந்த சம்பவம் நடந்ததும் சட்டசபையை கூட்டி, அரசியல் சாசனத்தின்படி பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டு, ஆனால் அரசியல் சாசனத்தை பொதுவெளியில் அவமானப்படுத்தியதால் பதவி நீக்கம் செய்கிறேன் என்று உத்தரவிட்டார்.

எனவே அரசியல் சாசனத்தை அவமானப்படுத்தியதற்கு இப்படி நடந்திருக்கிறதே? நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என்று அவரை பத்திரிகையாளர்கள் கேட்டுப்பாருங்கள். பிரதமர் மோடி இனி ஆர்.என்.ரவியை மாற்றிவிட்டு அவருக்கு பதிலாக ஒரு கிளியை அனுப்பலாம். ஆனால் இந்த அரசு மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story