மக்களவைத் தேர்தலில் எங்களது சொந்த சின்னத்தில்தான் போட்டியிடுவோம் - ம.தி.மு.க. அவைத்தலைவர்
தி.மு.க. உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்தது என்று ம.தி.மு.க. அவைத்தலைவர் கூறினார்.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான தி.மு.க.-ம.தி.மு.க. இடையேயான தொகுதி பங்கீடு குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான பேச்சுவார்த்தை குழுவினருடன் ம.தி.மு.க. தேர்தல் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது திருச்சி, விருதுநகர், காஞ்சிபுரம், கடலூர், ஈரோடு, மயிலாடுதுறை ஆகிய 6 தொகுதிகள் அடங்கிய விருப்ப பட்டியலை ம.தி.மு.க. வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த முறை திமுக கூட்டணியில் ஈரோடு மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை எம்.பி. இடம் ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
தொகுதிப் பங்கீட்டு குழுவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின் ம.தி.மு.க. அவைத்தலைவர் அர்ஜூன்ராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தி.மு.க. உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்தது. 2 மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்க தி.மு.க.விடம் கேட்டுள்ளோம். மக்களவைத் தேர்தலில் எங்கள் கட்சி சின்னத்தில்தான் கண்டிப்பாக போட்டியிடுவோம். ம.தி.மு.க. சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்பதுதான் கட்சி நிலைப்பாடு; இதுகுறித்து தி.மு.க. குழுவிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ், சி.பி.ஐ., சி.பி.எம்., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தையை தி.மு.க. நிறைவு செய்துள்ளது.