பாசனம் மற்றும் குடிநீருக்கு ஆழியாறு அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு
இன்று முதல் டிசம்பர் 5-ந் தேதி வரை 11 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டம் ஆழியாறு அணையில் இருந்து எலவக்கரை குளத்தை நிரப்புவதால், அதன் ஆயக்கட்டு பகுதியில் உள்ள பயிர்களை காப்பாற்றுவதற்கும் மற்றும் பாலாற்றில் தண்ணீர் கொண்டு செல்வதால், பாலாற்றின் இருபுறமும் உள்ள ஜல்லிபட்டி, துறையூர், கம்பாலபட்டி மற்றும் கரியாஞ்செட்டிபாளையம் ஆகிய கிராமங்களில் உள்ள கிணறுகளின் நீர்மட்டம் உயருவதால் அவற்றின் குடிநீர் தேவைகள் மறைமுகமாக பூர்த்தி செய்வதற்கும், ஆழியாறு அணையில் இருந்து 24-ந் தேதி (இன்று) முதல் டிசம்பர் 5-ந் தேதி வரை 11 நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு 61 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.
திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தைச் சார்ந்த 18 அமராவதி பழைய வாய்க்கால்களின் (ராமகுளம் முதல் கரூர் வலது கரை வரை) பாசன பகுதிகளில் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட பாசன நிலங்களுக்கு அமராவதி ஆற்று மதகு வழியாகவும், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புதிய பாசன நிலங்களுக்கு அமராவதி பிரதான கால்வாய் வழியாகவும் 24-ந் தேதி (இன்று) முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை 37 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட அரசு அனுமதி அளித்துள்ளது.
அதேபோன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா மணிமுக்தா நதி அணையில் இருந்து பாசனத்துக்காக 79 நாட்கள் தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.