குரோம்பேட்டையில் மின்சாரம் தாக்கி காவலாளி பலி


குரோம்பேட்டையில் மின்சாரம் தாக்கி காவலாளி பலி
x

குரோம்பேட்டையில் மின்சாரம் தாக்கி காவலாளி பலியானார்.

செங்கல்பட்டு

காவலாளி

சென்னையை அடுத்த குரோம்பேட்டை கணபதிபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் கிருஷ்ணமோகன் குமார்(வயது 29). பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர், கடந்த 3 ஆண்டுகளாக தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.

குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரி அருகே ஜி.எஸ்.டி. சாலை சர்வீஸ் சாலையில் உள்ள தனியார் தொலைத்தொடர்பு ஷோரூமில் காவலாளியாக பணி அமர்த்தப்பட்டு இருந்தார்.

மின்சாரம் தாக்கி பலி

நேற்று ஷோரூம் ஷட்டரை திறக்க முயன்றபோது அதில் மின்சாரம் பாய்வதுபோல் தெரிந்தது. இதனால் கிருஷ்ணமோகன் குமார், மொட்டை மாடிக்கு சென்று ஷட்டரில் மின்வயர்கள் உரசியடி செல்கிறதா? என அதனை சரி செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு மாடியில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்த கிருஷ்ணமோகன் குமார், குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.

அவருக்கு ஊர்மிளா என்ற மனைவியும், 6 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக குரோம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மழைநீர் கால்வாய் பள்ளம்

அந்த ஷோரூமின் முன்புறம் நெடுஞ்சாலை துறை சார்பில் மழைநீர் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டி உள்ளனர். அதன் அருகிலேயே பூமிக்கடியில் மின்சார கேபிள்கள் பதிக்கப்பட்டு உள்ளது.

மழைநீர் கால்வாய்க்காக தோண்டிய பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் அந்த மின்சார கேபிள்கள் முழுவதும் மழைநீரில் மூழ்கி உள்ளது. இதனால் மின்கசிவு ஏற்பட்டு அந்த ஷோரூம் ஷட்டரில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்ததாக தெரிகிறது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த மின்வாரிய ஊழியர்கள், ஷோரூமுக்கு சென்ற மின் இணைப்பை துண்டித்தனர்.


Next Story