தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர பகுதிகளில் ரெட் அலர்ட் ஏன்?


தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர பகுதிகளில்  ரெட் அலர்ட்  ஏன்?
x

கோப்புப்படம் 

நாளை இரவு வரை தென் தமிழக மாவட்டங்களில் 0.5 முதல் 1.8 மீட்டர் வரை கடல் அலை எழுப்புவதற்க்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

காற்றின்போக்கு காரணமாக தென் தமிழக கடற்கரை, கேரளா, கர்நாடகா, மும்பை கடலோரங்களில் அதீத அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி கர்நாடகா, மராட்டியம் பகுதிகளில் அதீத அலைக்கான எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்தது. அதன் எதிரொலியாக தமிழ்நாட்டிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றின் போக்கு காரணமாக கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும், இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த கவனமுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி குமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களின் கடலோர பகுதிகள் ரெட் அலர்ட்டும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் கடலோர கிராமங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், கடலூர் மற்றும் நாகப்பட்டினம் கடற்பகுதிகளுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

நாளை இரவு வரை தென் தமிழக மாவட்டங்களில் 0.5 முதல் 1.8 மீட்டர் வரை கடல் அலை எழுப்புவதற்க்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என கடல் சார் தகவல் மையமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாளை இரவு வரை Swell Surge எனப்படும் காற்றின் மாறுபாடு காரணமாக முன்னெச்சரிக்கை இல்லாத கடல் கொந்தளிப்பு இருக்கும் என்பதால் மீனவர்கள் தங்கள் படகுகளை கரைகளில் இருந்து தூரமாக நிறுத்தி வைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது தமிழில் கல்லக்கடல் விளைவு என்றழைக்கப்படுகிறது.

மேலும் மும்பையில் கடல் சீற்றமாக இருக்கும் என்பதால் அதிக உயரத்தில் கடல் அலைகள் எழும்பலாம் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடல் அலைகள் 1.5 மீட்டர் உயரத்திற்கு எழும் என்பதால் மக்கள் அங்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story