மன்னிப்பு கேட்ட வார்டன்... திருச்சி என்.ஐ.டி. கல்லூரி மாணவர்களின் போராட்டம் வாபஸ்


மன்னிப்பு கேட்ட வார்டன்... திருச்சி என்.ஐ.டி. கல்லூரி மாணவர்களின் போராட்டம் வாபஸ்
x

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஒப்பந்த ஊழியர் கதிரேசன் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி,

திருச்சி அருகே உள்ள துவாக்குடியில் மத்திய அரசுக்கு சொந்தமான என்.ஐ.டி. கல்லூரி அமைந்துள்ளது. இங்கு தமிழகம் மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி பயின்று வருகின்றனர். கல்லூரி வளாகத்தில் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனி விடுதி வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த கல்லூரி வளாகத்தில் தற்போது பல்வேறு கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நேற்று மதியம் மாணவிகள் விடுதியில் வை-பை வசதி ஏற்படுத்துவதற்காக ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த ஒப்பந்த தொழிலாளி கதிரேசன் விடுதிக்குள் சென்றார். அப்போது தன்னந்தனியாக விடுதி அறையில் படித்துக் கொண்டிருந்த மாணவியிடம் அவர் அத்துமீறி பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி கூச்சலிட்டுக் கொண்டு வெளியே ஓடி வந்தார். மேலும் தனக்கு நேர்ந்த அநீதியை வாட்ஸ் அப்பில் பதிவிட்டார். இது விடுதியில் தங்கி பிடிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வேகமாக பரவியது.

இதற்கிடையே விடுதி பெண் வார்டனிடம் பாதிக்கப்பட்ட மாணவி முறையிட்டார். அப்போது அவர், ஆடைகள் சரியாக அணியாத காரணத்தினால் தான் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறது என அவரை கண்டித்ததாக தெரிகிறது. இது மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மாணவ-மாணவிகள் கல்லூரி விடுதி முன்பு திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கல்லூரி முதல்வர் அகிலா மாணவ-மாணவிகளிடம் நேற்று இரவு பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. அதைத் தொடர்ந்து நேற்று இரவு 11:30 மணிக்கு தொடங்கிய போராட்டம் விடிய விடிய நீடித்தது.

இன்று காலை 2-வது நாளாக போராட்டம் நடந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட விடுதி மாணவ-மாணவிகள் ஈடுபட்டனர். மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஒப்பந்த ஊழியர் கதிரேசன் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிகள் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் என்.ஐ.டி. கல்லூரி இயக்குநர் அகிலாவுடன் திருச்சி எஸ்.பி. வருண்குமார் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து என்.ஐ.டி. கல்லூரி மாணவிகளிடம் எஸ்.பி. வருண்குமார், கல்லூரி இயக்குநர் அகிலா பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து மாணவிகளிடம் வார்டன் மன்னிப்பு கேட்டார். வார்டன் மன்னிப்பு கேட்டதால் மாணவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். பெண் வார்டன் மீது புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட கலெக்டர் உறுதி அளித்துள்ளார்.

போராடிய மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது எனவும் என்.ஐ.டி. நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. மேலும், கல்லூரியில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட சில கோரிக்கைகளை மாணவர்கள் முன் வைத்துள்ளனர். மாணவர்களின் கோரிக்கைகள் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story