விவேகானந்தம் வித்யாஷ்ரம் பள்ளி ஆண்டு விழா

ஆண்டு விழா விவேகானந்தம் வித்யாஷ்ரம் பள்ளி ஆண்டு விழா விஞ்ஞானி மயில்சாமிஅண்ணாதுரை பங்கேற்பு
நன்னிலம்:
திருவாரூர் அருகே உள்ள வண்டாம்பாளை விவேகானந்தம் வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஆண்டு விழா 2 நாட்கள் நடந்தது. முதல் நாள் மழலையர் மற்றும் 2-ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கும், 2-ம் நாளான நேற்று 3 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ- மாணவிகளுக்கும் ஆண்டு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் மகாலட்சுமி தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் ஜனகமாலா முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக இந்திய விண்வெளி மையத்தின் இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டு, பல்வேறு அறிவுதிறன்சார் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் தன் சிறுவயதில் நடந்த பள்ளிப்பருவ நிகழ்வுகளை மாணவர்களுக்கு எடுத்துக்கூறினார். இந்திய மாணவர்கள் உருவாக்கிய செயற்கைகோள்களை இந்திய விண்வெளியில் ஏவியுள்ளதை நினைவுகூர்ந்தார். தன்னைப்போல் பல மயில்சாமி அண்ணாதுரைகள் உருவாவதற்கு இந்த பள்ளி ஊன்றுகோலாக இருக்கும் எனவும் அவர் கூறினார். மேலும் நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்ற பாரதியின் பாடலை மேற்கோள் காட்டி உயர்ந்த எண்ணங்களையும். இலக்குகளையும், கனவுகளையும் ஏற்படுத்திக்கொண்டு வாழ்வில் சாதிக்க வேண்டும் என மாணவர்களை கேட்டுக்கொண்டார்.






