கீழடி அருங்காட்சியகத்தில் குவிந்த பார்வையாளர்கள்
தொடர் விடுமுறையை முன்னிட்டு கீழடி அருங்காட்சியகத்தில் பார்வையாளர்கள் குவிந்தனர்.
கீழடி அருங்காட்சியகம்
திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடியில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை கடந்த மார்ச் மாதம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து திறந்து வைத்தார். பின்பு அருங்காட்சியகத்தின் உள்ளே சென்று ஒவ்வொரு தளமாக பார்வையிட்டும் விவரங்களை கேட்டறிந்தார். தொடர்ந்து மார்ச் 6-ந் தேதி முதல் அருங்காட்சியகத்தை பொதுமக்கள் இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.
கீழடி அருங்காட்சியகத்தில் 6 தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தளங்களிலும் கீழ் பகுதி, மேல் பகுதி என அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டுள்ள 2600 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள பழங்கால பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் கீழடி தோன்றிய வரலாறு குறித்து சிறிய திரையரங்கம் போல் அமைக்கப்பட்டு குறும்படம் ஒளிபரப்பப்படுகிறது. இதில் சுமார் 50 நபர்கள் வரை அமர்ந்து குளிர்சாதன வசதியுடன் கீழடி வரலாறை பார்க்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 15 நிமிடம் திரை மூலம் குறும்படம் ஒளிபரப்பப்படுகிறது.
2 ஆயிரம் பார்வையாளர்கள்
கீழடி அருங்காட்சியகத்தை தினசரி பார்வையாளர்கள், சுற்றுலா பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், வெளி மாநிலத்தினர் என ஏராளமானோர் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டண முறை அமல்படுத்தப்பட்டது.
தினமும் சுமார் 1500 பேர் வீதமும், விடுமுறை தினங்களில் சுமார் 2000 பேர் வரையும் பார்வையிட்டு செல்கின்றனர். நேற்று முதல் தொடர் விடுமுறை என்பதால் வழக்கத்தை விடு பார்வையாளர்கள் அதிகமாக குவிந்தனர். தொடர் விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள், பார்வையாளர்கள், சுற்றுலா பயணிகள் என சுமார் 2000-க்கும் மேற்பட்டவர்கள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள பொருட்களை பார்வையிட்டு சென்றுள்ளனர் என கூறப்படுகிறது.