சுதந்திர தின விடுமுறை அன்று விதிமுறை மீறல்: நிறுவன உரிமையாளர்கள் 465 பேர் மீது நடவடிக்கை


சுதந்திர தின விடுமுறை அன்று விதிமுறை மீறல்: நிறுவன உரிமையாளர்கள் 465 பேர் மீது நடவடிக்கை
x
சென்னை

சென்னை,

தொழிலாளர் கமிஷனர் அதுல் ஆனந்த், கூடுதல் தொழிலாளர் கமிஷனர் உமாதேவி ஆகியோரின் அறிவுறுத்தலுக்கு இணங்க சென்னை முதல் வட்ட தொழிலாளர் இணை கமிஷனர் விமலநாதன் உத்தரவின் பேரில் சென்னை 1, 2 மற்றும் 3-ம் வட்ட தொழிலாளர் உதவி கமிஷனர்கள் (அமலாக்கம்) தலைமையில் சுதந்திர தினத்தன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சென்னை மாவட்டத்தில் 324 கடைகள் மற்றும் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 257 விதி மீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதேபோல 259 உணவு நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 201 விதி மீறல்களும், 21 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் செய்யப்பட்ட ஆய்வில் 7 விதிமீறல்களும் கண்டறியப்பட்டது. மொத்தம் 465 நிறுவனங்களின் மீது அபராதம் விதித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை 3-ம் வட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) எஸ்.நீலகண்டன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தேசிய விடுமுறை தினத்தன்று நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்கவேண்டும். அவ்வாறு விடுமுறை அளிக்காமல் பணிக்கு அமர்த்தியுள்ள தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு வழங்கவேண்டும். இதுதொடர்பாக தொழிலாளர் உதவி ஆய்வாளர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவேண்டும். அவ்வாறு அளிக்காத 465 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story