செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு: சப்-கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை விருத்தாசலத்தில் பரபரப்பு
செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம்,
எதிர்ப்பு
விருத்தாசலம் அருகே கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியம் பாலக்கொல்லை கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையறிந்த கிராம மக்கள் குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைத்தால், அதில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சால் ஆஸ்துமா உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படும்.
முற்றுகை
ஆகவே குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்டத் தலைவர் அய்யாசாமி தலைமையில் மண்ணுரிமை இயக்கத் தலைவர் திருமாறன், பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட பொது செயலாளர் பாக்யராஜ், மாவட்ட துணைத் தலைவர் சிவப்பிரகாசம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்முருகன், அருள்செல்வன் ஆகியோர் முன்னிலையில் பாலக்கொல்லை மக்கள் நேற்று விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுபற்றி தகவல் அறிந்ததும் சப்-கலெக்டர் பழனி விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இதுதொடர்பாக மனு கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதனை ஏற்ற கிராம மக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி சப்-கலெக்டரிடம் கொடுத்துவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சப்-கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.