சென்னை மெரினா கடற்கரையில் குடியரசு தின விழா நடக்கும் இடம் மாறுகிறது - தமிழக அரசு ஆலோசனை


சென்னை மெரினா கடற்கரையில் குடியரசு தின விழா நடக்கும் இடம் மாறுகிறது - தமிழக அரசு ஆலோசனை
x

மெட்ரோ ரெயில் பணிகளுக்காக வேலை நடைபெற்று வருவதால் இந்த ஆண்டு காந்தி சிலை அருகே குடியரசு தின விழாவை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக அரசு சாா்பில் ஆண்டுதோறும் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள், சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகம் எதிரேயுள்ள மகாத்மா காந்தி சிலைக்கு முன்பாக நடைபெற்று வருகின்றன.

தற்போது அந்த பகுதி முழுவதும், மெட்ரோ ரெயில் பணிகளுக்காக தடுப்பு அமைக்கப்பட்டு, மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆண்டுதோறும் குடியரசு தின விழா கொண்டாடப்படும் இடத்தை மாற்ற அரசு முடிவு செய்தது.

காமராஜா் சாலையிலேயே அருகில் மற்றொரு இடத்தில் குடியரசு தின விழாவை நடத்தலாம் என்று அரசு ஆலோசித்து வருகிறது. தற்போது 2 இடங்களை அரசு பரிசீலித்து வருகிறது. அதன்படி, உழைப்பாளா் சிலை முன்பாக அல்லது விவேகானந்தா் இல்லம் முன்பாக மேடை அமைத்து குடியரசு தின விழாவை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த இடத்தை இறுதி செய்வது தொடர்பாக நேற்று தலைமைச் செயலகத்தில் பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காவல்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகளும் முப்படை அதிகாரிகளும் அதில் பங்கேற்றனர். அடுத்த ஆலோசனைக் கூட்டத்தில் குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நடைபெறும் இடம் முடிவு செய்யப்படும் என்று அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Next Story