மேற்கு சைதாப்பேட்டையில் துணிகரம்: ஆடிட்டரை கட்டிப்போட்டு ரூ.7 லட்சம் - நகைகள் கொள்ளை கத்தி முனையில் கொள்ளையர்கள் அட்டூழியம்


மேற்கு சைதாப்பேட்டையில் துணிகரம்: ஆடிட்டரை கட்டிப்போட்டு ரூ.7 லட்சம் - நகைகள் கொள்ளை கத்தி முனையில் கொள்ளையர்கள் அட்டூழியம்
x

சென்னை மேற்கு சைதாப்பேட்டையில் ஆடிட்டரை கட்டிப்போட்டு, அவர் வீட்டில் இருந்த ரூ.7 லட்சம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்து கொண்டு முகமூடி நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

சென்னை

சென்னை,

சென்னை மேற்கு சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாதை அருகேயுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் தாணுமலையான் (வயது 65). இவர், ஆடிட்டராக உள்ளார். நேற்று பகலில் இவர், வீட்டில் குடும்பத்தினருடன் இருந்தார். அப்போது முகமூடி அணிந்த 4 பேர் வீட்டுக்குள் புகுந்தனர்.

தாணுமலையான் கழுத்தில் கத்தியை வைத்து, "சத்தம் போட்டால் கொன்றுவிடுவோம்" என்று மிரட்டினார்கள். இதனால் தாணுமலையானும், அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். பின்னர் தாணுமலையான் கை, கால்களை கட்டி போட்டனர். அவரது குடும்பத்தினரை வீட்டில் உள்ள ஒரு அறையில் அடைத்து கதவை பூட்டினார்கள். "யாராவது சத்தம் போட்டால் தாணுமலையான் உயிர் போய்விடும்" என்று பயமுறுத்தினார்கள். இதனால் யாரும் சத்தம் போடவில்லை.

முகமூடி நபர்கள் மின்னல் வேகத்தில் செயல்பட்டனர். தாணுமலையான் வீட்டில் இருந்த பீரோவை திறந்து அதற்குள் இருந்த ரூ.7 லட்சம் மற்றும் தங்க நகைகளை ஒரு பையில் போட்டு அள்ளினார்கள். பின்னர் மின்னல் வேகத்தில் வீட்டை விட்டு வெளியே வந்த அவர்கள் தப்பி சென்று விட்டனர்.

அவர்கள் தப்பிச் சென்ற சிறிது நேரத்துக்கு பிறகு தாணுமலையானும், அவரது குடும்பத்தினரும் கூச்சல் போட்டனர். அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து தாணுமலையானின் கை, கால்களை அவிழ்த்து விட்டனர். வீட்டில் அடைபட்டு கிடந்த குடும்பத்தினரும் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து உடனடியாக குமரன்நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கொள்ளையர்கள் 4 பேரில் ஒருவரது குரலை வைத்து அவர் யார்? என்று அடையாளம் தெரியவந்துள்ளது. அவரது பெயர் உசேன். தாணுமலையான் வீட்டில் அவர் கார் டிரைவராக வேலை பார்த்துள்ளார். வேலையை விட்டு நீக்கப்பட்டு உள்ளார். இதனால் ஆத்திரப்பட்டு உசேன் கொள்ளையனாக மாறி இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்ஹா மேற்பார்வையில் அடையாறு துணை கமிஷனர் மகேந்திரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். நகை, பணத்துடன் தப்பி சென்ற கொள்ளையர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் காயம் அடைந்த தாணுமலையான் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.


Next Story