கோயம்பேடு மார்கெட்டில் வரத்து அதிகரிப்பால் வீணாகும் காய்கறிகள் - வியாபாரிகள் கவலை
கோயம்பேடு மார்கெட்டில் வரத்து அதிகரிப்பால் தினசரி 5டன் காய்கறிகள் வீணாகி குப்பையில் கொட்டப்படுகிறது
போரூர்,
சென்னை கோயம்பேடு மார்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து இன்று 450 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்துள்ளது.
கடந்த 2 நாட்களாகவே சந்தைக்கு பொருட்கள் வாங்க வரும் சில்லரை வியாபாரிகள் மற்றும் காய்கறி கடைக்காரர்களின் வரத்து வெகுவாக குறைந்துவிட்டது. இதன் காரணமாக மார்கெட் வளாகம் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது. விற்பனை ஆகாமல் தேக்கமடைந்து வீணாகும் 4முதல் 5டன் அளவிலான காய்கறிகள் குப்பையில் கொட்டப்பட்டு வருவதால் மொத்த வியாபாரிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர் .
இன்று மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ10-க்கும், அவரைக்காய் ஒரு கிலோ ரூ12-க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ ரூ10-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ள போதிலும் அதை வாங்கி செல்ல சந்தைக்கு இன்று சில்லரை வியாபாரிகள் அதிகளவில் வரவில்லை.
மொத்த வியாபாரி சுகுமார் கூறும்போது,
காய்கறி வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் தக்காளி, அவரை, வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதனால், மார்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகளின் வரத்து குறைந்து விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே தேக்கமடைந்து வீணாகி வரும் காய்கறிகளை குப்பையில் கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.