பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள்
பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
அரியலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆதனூர்-மழவராயநல்லூர் சாலையில் நெடுஞ்சாலைத்துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் மருதையாற்றின் மேல் ரூ.14.35 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. விழாவில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு பாலம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். கலெக்டர் ரமணசரஸ்வதி, சின்னப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், மருதையாற்றில் வெள்ளப்பெருக்கின் போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பெரிதும் இடையூறாக சாலை போக்குவரத்து உள்ளதாலும், ஓரியூர் சாலை வழியாக ஆதனூர் செல்லவதற்கு பிரதான சாலையில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவு உள்ளது. பாலம் கட்டும் பணி முடிவடைந்தால் 3 கிலோ மீட்டர் பிரதான சாலையை அடைய முடியும். மேலும் அவர் பாலப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் கட்டி முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதேபோல் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பஸ் நிலையத்தில் குன்னம் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.40 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா தலைமை தாங்கினார். போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பெருமத்தூர் குடிகாடு சமத்துவபுரம் கிராமத்தில் ரூ.63 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்தார். லெப்பைக்குடிகாடு கிராமத்தில், ஆத்தூரில் இருந்து கெங்கவள்ளி, வீரகனூர், வி.களத்தூர் வழியாக தொழுதூர் வரை வந்த அரசு பஸ்சை தொழுதூரிலிருந்து லெப்பைக்குடிகாடு வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வழித்தடத்தை நீடித்து அமைச்சர் துவக்கி வைத்தார். ஆத்தூரில் இருந்து தினமும் காலை 3.50 மணிக்கும் மதியம் 3.10 மணிக்கும், லெப்பைக்குடிகாட்டில் இருந்து காலை 7 மணிக்கும் மாலை 6.35 மணிக்கும் புறப்படுகிறது. இவ்வழித்தட நீடிப்பால் லெப்பைகுடிக்காட்டில் இருந்து ஆத்தூருக்கு தொழுதூர், வி.களத்தூர், கை.களத்தூர், வீரகனூர், மஞ்சினி வழியாக நேரடி பஸ் வசதி ஏற்படுத்தப்பட்டது. அத்தியூர் குடிக்காடு கிராமத்தில் ரூ.46 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணியையும், ரூ.19 லட்சம் செலவில் அகரம் சீகூர் கருப்பட்டாங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லும் நாட்டினார். கீழ பெரம்பலூர் ஊராட்சி வேள்வி மங்கலத்தில் ரூ.50 லட்சம் செலவில் கட்டப்பட்ட சமூதாய கூட கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில் பெரம்பலூர் கோட்டாட்சியர் நிறைமதி, ஆதிதிராவிடர் நல அலுவலர் பால்பாண்டி, குன்னம் தாசில்தார் அனிதா, லெப்பைகுடிக்காடு பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ் கிருஷ்ணன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் அரசு துறை அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.