வேங்கைவயல் விவகாரம்; குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கும் அநீதியாகும் - டிடிவி தினகரன்
விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருப்பது பாதிக்கப்பட்ட மக்களின் மீதான தமிழ்நாடு அரசின் அக்கறையின்மையை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.
சென்னை,
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்து ஓராண்டாகியும் தற்போது வரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கும் அநீதியாகும்.
ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கிய கொடுஞ்செயலுக்கு காரணமான குற்றவாளிகளை இதுவரை கைது செய்யாமல் இருப்பதன் மூலம் வேங்கைவயல் சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளிகள் மற்றும் பல்வேறு கிராமங்களில் பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டிகளிலும் இந்த அவலச்சம்பவம் அரங்கேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வேங்கைவயல் சம்பவம் நடைபெற்று ஓராண்டைக் கடந்த நிலையிலும் விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருப்பது பாதிக்கப்பட்ட மக்களின் மீதான தமிழ்நாடு அரசின் அக்கறையின்மையை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.
எனவே, வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தி வேங்கைவயல் கொடுஞ்செயலுக்கு காரணமானவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனை பெற்றுத்தருவதோடு, வருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறா வண்ணம் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.