வள்ளி- முருகன் திருக்கல்யாணம்


வள்ளி- முருகன் திருக்கல்யாணம்
x

வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வள்ளி- முருகன் திருக்கல்யாணம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

காட்பாடியை அடுத்த வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 24-ந் தேதி மாசிமாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கடந்த 2-ந் தேதி வியாழக்கிழமை தொடங்கி நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் நிலைைய அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

தேரோட்டம் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று வள்ளி- முருகன் திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக காலை 6 மணி அளவில் பழங்குடி இருளர் குல மரபினர்களின் வேடர்பரி உற்சவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பழங்குடி இருளர் குல மரபினர்கள், வள்ளி சன்னதியில் இருந்து தேன், தினைமாவு மற்றும் சீர்வரிசை பொருட்களுடன் வள்ளி திருமண மேடைக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர். அங்கு கோவில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க வள்ளி- முருகன் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பக்தர்கள் மொய் எழுதும் நிகழ்ச்சி நடைபெற்றது. பணம், தங்கம் மற்றும் வெள்ளி நகை, பரிசு பொருட்களை பக்தர்கள் மொய்யாக வழங்கினர். மொத்தம் ரூ.2,85,193 மொய் எழுதப்பட்டிருந்தது.

இரவு 7 மணி அளவில் பிணக்கு தீர்க்கும் உற்சவம் நடைபெற்றது. பின்னர் ஆட்டுக்கிடா வாகனத்தில் திருவீதி உலா நடந்தது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி அளவில் 108 சங்காபிஷேகம் நடைபெறுகிறது.


Next Story